சொத்து பிரச்சினையில் அண்ணனை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு


சொத்து பிரச்சினையில் அண்ணனை கொன்ற விவசாயிக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 23 Oct 2018 4:00 AM IST (Updated: 23 Oct 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

சொத்து பிரச்சினையில் அண்ணனை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி,


ஆண்டிப்பட்டி தாலுகா, மயிலாடும்பாறை அருகில் உள்ள காமன்கல்லூர் கிராமத்தை சேர்ந்த பொன்னையா மகன்கள் குரும்பன் (வயது 65), சின்னன் (51). இருவரும் விவசாயிகள். இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. அடிக்கடி இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு குரும்பன் நடந்து சென்று கொண்டு இருந்த போது அவருடைய தம்பி சின்னன் அவரை வழிமறித்து சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு செய்துள்ளார். அப்போது அவருடைய தலையில் இரும்பு கம்பியால் சின்னன் தாக்கினார். இதில் பலத்த காயம் அடைந்த அவர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து மயிலாடும்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னனை கைது செய்தனர். அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கு தேனி மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் டி.கே.ஆர்.கணேசன் ஆஜராகி வாதாடினார். இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சீனிவாசன் நேற்று தீர்ப்பு கூறினார்.

அண்ணனை கொலை செய்த குற்றத்துக்காக சின்னனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 6 மாத காலம் சிறை தண்டனையும், வழிமறித்து தகராறு செய்த குற்றத்துக்கு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.500 அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.

இதையடுத்து சின்னனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story