மாசுபாட்டை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி


மாசுபாட்டை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி
x
தினத்தந்தி 24 Oct 2018 3:45 AM IST (Updated: 24 Oct 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் அதிகரித்து வரும் மாசுபாட்டை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி தெரிவித்துள்ளது.

பெங்களூரு,

பெங்களூருவில் கிராபைட் இந்தியா நிறுவனம் உள்ளது. அந்த நிறுவனம் கருப்பு தூசியை அதிகளவில் வெளியேற்றி காற்று மாசுபாட்டை ஏற்படுத்துவதாகவும், எனவே அந்த நிறுவனத்தை மூட உத்தரவிடுமாறும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த 9-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் கிராபைட் நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நீதிபதிகள் மதன் லோகூர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கிராபைட் இந்தியா நிறுவனம் சார்பில் வக்கீல் ஷியாம் திவான் ஆஜரானார். அப்போது நீதிபதிகள் கூறுகையில், “பெங்களூருவில் அதிகரித்து வரும் மாசுபாட்டை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெங்களூரு மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வாரியம் என்ன செய்து கொண்டிருக்கிறது?. அந்த வாரியம் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறது“ என்று அதிருப்தி தெரிவித்தனர்.

அப்போது வக்கீல் ஷியாம் திவான், “பெங்களூரு கிராபைட் இந்தியா நிறுவனத்தை வருகிற நவம்பர் மாதத்திற்குள் மூட முடிவு செய்துள்ளோம். எங்கள் நிறுவனத்தால் மாசுபாடு அடைவது இல்லை. சுப்ரீம் கோர்ட்டுடன் சண்டை போட நாங்கள் விரும்பவில்லை. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை நவம்பர் மாத இறுதி அல்லது டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும். அதற்குள் எங்கள் நிறுவனத்தை மூடி விடுகிறோம்“ என்றார்.

அதற்கு நீதிபதிகள், “இதுவரை உங்கள் நிறுவனத்தால் ஏற்பட்டு மாசுவுக்கு என்ன நிவாரணம் கொடுக்க போகிறீர்கள் என்பது தான் எங்களின் கேள்வி. உங்களின் நிறுவனத்தை மூடுவது பற்றி நாங்கள் கேட்கவில்லை. இது தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி முடிவு எடுங்கள். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை வருகிற 29-ந் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்“ என்றனர்.

Next Story