பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டாமல் தாமிரபரணி ஆற்றை தூய்மையாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: பாபநாசத்தில் புனித நீராடிய நடிகர் விவேக் பேட்டி


பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டாமல் தாமிரபரணி ஆற்றை தூய்மையாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: பாபநாசத்தில் புனித நீராடிய நடிகர் விவேக் பேட்டி
x
தினத்தந்தி 23 Oct 2018 9:30 PM GMT (Updated: 23 Oct 2018 7:31 PM GMT)

பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டாமல் தாமிரபரணி ஆற்றை தூய்மையாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என நடிகர் விவேக் கூறினார்.

விக்கிரமசிங்கபுரம், 

தாமிரபரணி மகா புஷ்கர விழாவையொட்டி நடிகர் விவேக் நேற்று நெல்லை மாவட்டம் பாபநாசத்துக்கு வந்தார். அங்குள்ள ஆனந்த விலாச படித்துறையில் அவர் புத்தகத்தை வைத்து மந்திரம் படித்தபடி புனித நீராடி, தாமிரபரணி ஆற்றில் மலர் தூவி வழிபட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

எனது சிறு வயது பருவத்தில் இருந்தே தாமிரபரணி ஆற்றை பற்றி எனக்கு தெரியும். நான் நேசிக்கும் ஆறு இது. காரணம் என்னவென்றால், நான் பிறந்ததே இந்த நெல்லை சீமையில்தான். பாளையங்கோட்டை தாமிரபரணி ஆற்றில் குளித்து வளர்ந்தவர்கள் நாங்கள். அதனால் தான் தாமிரபரணி புஷ்கர விழாவில் நீராட வந்தேன். இங்கு வந்ததும் பழைய நினைவுகள் எல்லாம் வருகிறது. தாமிரபரணி ஆறு இந்தியாவில் உள்ள தொன்மையான ஆறுகளில் ஒன்று. பொதிகை மலையில் தொடங்கி, புன்னக்காயல் வரைக்கும் நெடும் பயணம் மேற்கொள்கிறது. வழி எங்கும் உள்ள மக்களுக்கு விவசாயத்துக்கும், குடிநீருக்கும் ஆதாரமாக விளங்குகிறது.

புஷ்கர விழாவில் குளித்தால் மட்டும் போதாது. இனிமேல் இந்த தாமிரபரணி ஆற்றை எப்படி பாதுகாக்க போகிறோம்? என்பதை எல்லோரும் யோசிக்க வேண்டும். லட்சக்கணக்கான மக்கள் புனித நீராடி புண்ணியத்தை தேடியிருக்கிறார்கள். இதற்கு அப்புறமும் இந்த தாமிரபரணியை தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கையில் தான் உள்ளது. நமது தாயை போல மதித்து சுத்தமாக வைக்க வேண்டும். பொதுமக்கள் இதனை வேண்டுகோளாக வைக்கிறேன்.

சங்க காலத்தில் இருந்தே இந்த நதி, பொருநை நதி என அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆறு தமிழ்நாட்டுக்கே சொந்தம். தமிழ்நாட்டின் பொக்கிஷத்தில் இதுவும் ஒன்று. நதிகள் எல்லாம் குறுகிக்கொண்டு வரும் இந்த நேரத்தில் இந்த தாமிரபரணி ஆறு பெருக்கெடுத்து ஓடுகிறது. தாமிரபரணி ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டாமல் இந்த நதியை தூய்மையாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு நடிகர் விவேக் கூறினார்.

பேட்டியின்போது நடிகர் விவேக்கின் செயலாளரும், நடிகருமான முருகன், கோவில்பட்டி தொழில் அதிபர் நாகஜோதி மற்றும் அவருடைய உறவினர்கள் உடனிருந்தனர். 

Next Story