டிக்கெட் எடுக்காததால் கோஷ்டி மோதல்: பஸ் கண்டக்டர் உள்பட 9 பேர் மீது வழக்கு; வாலிபர் கைது


டிக்கெட் எடுக்காததால் கோஷ்டி மோதல்: பஸ் கண்டக்டர் உள்பட 9 பேர் மீது வழக்கு; வாலிபர் கைது
x
தினத்தந்தி 23 Oct 2018 10:15 PM GMT (Updated: 2018-10-24T01:35:48+05:30)

டிக்கெட் எடுக்காததால் ஏற்பட்ட கோஷ்டி மோதல் தொடர்பாக பஸ் கண்டக்டர் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

வேதாரண்யம்,

வேதாரண்யத்தில் இருந்து நாலுவேதபதிக்கு சம்பவத்தன்று மினி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் புஷ்பவனத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் தமிழ்ச்செல்வன் (வயது23) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.

வேதாரண்யம் அருகே அந்த பஸ் சென்று கொண்டிருந்தபோது, அதில் பயணம் செய்த புஷ்பவனத்தை சேர்ந்த கேசவன் மகன் சுரேஷ் (30) என்பவரிடம் தமிழ்ச்செல்வன், டிக்கெட் எடுக்க கூறினார். ஆனால் அவர் டிக்கெட் எடுக்கவில்லை. இதையடுத்து தமிழ்ச்செல்வன், சுரேஷை பஸ்சில் இருந்து இறக்கி விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ், தமிழ்ச்செல்வனை தாக்கினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்ச்செல்வன் தரப்புக்கும், சுரேஷ் தரப்புக்கும் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அப்போது சுரேஷை, தமிழ்ச்செல்வன் உள்பட 7 பேர் சேர்ந்து தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த சுரேஷ் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கோஷ்டி மோதல் தொடர்பாக 2 தரப்பினரும், வேதாரண்யம் போலீசில் தனித்தனியாக புகார் அளித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் மற்றும் போலீசார் இரு தரப்பையும் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக தினேஷ்குமார் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story