கின்னஸ் சாதனைக்காக தலைமுடியால் காரை 100 மீட்டர் தூரம் இழுத்த 3-ம் வகுப்பு மாணவி


கின்னஸ் சாதனைக்காக தலைமுடியால் காரை 100 மீட்டர் தூரம் இழுத்த 3-ம் வகுப்பு மாணவி
x
தினத்தந்தி 23 Oct 2018 10:30 PM GMT (Updated: 23 Oct 2018 8:46 PM GMT)

பட்டுக்கோட்டை அருகே கின்னஸ் சாதனைக்காக தலைமுடியால் 100 மீட்டர் தூரம் காரை 3-ம் வகுப்பு மாணவி இழுத்து சென்றார். 890 கிலோ எடை உள்ள காரை 77 வினாடிகளில் இழுத்து முடித்த இந்த மாணவியை பொதுமக்கள் பாராட்டினர்.

பட்டுக்கோட்டை,

காரில் கயிரை கட்டி பற்களால் கடித்து சில மீட்டர் தூரம் வரை இழுத்து சென்று வாலிபர்கள் சாதனை படைத்த நிகழ்வுகள் கடந்த காலங்களில் நடந்துள்ளது. ஆனால் 3-ம் வகுப்பு மாணவி 890 கிலோ எடை உள்ள காரில் தனது தலைமுடியை கட்டி 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்ற சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலை வெங்கடாசலம் நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவருடைய மகள் சம்யுக்தா (வயது8). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி சம்யுக்தா கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறார். மேலும் கின்னஸ் சாதனைக்காக தலைமுடியில் காரை கட்டி இழுக்கும் பயிற்சியையும் மேற்கொண்டு வந்தார்.

இந்தநிலையில் மாணவி சம்யுக்தா காரை தலைமுடியால் கட்டி இழுத்து சாதனை படைக்கும் நிகழ்ச்சி பட்டுக்கோட்டை- அறந்தாங்கி பிரதான சாலையில் அலிவலம் கிராமத்தில் நடைபெற்றது. முன்னதாக மாணவியின் தலைமுடியில் கயிற்றை கட்டி அதன் முனை காரில் கட்டப்பட்டது. பின்னர் மாணவி சம்யுக்தா தலைமுடியால் சுமார் 890 கிலோ எடை உள்ள காரை 100 மீட்டர் தூரத்துக்கு 77 வினாடிகளில் இழுத்து சென்று சாதனை படைத்தார்.

அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மாணவி சம்யுக்தாவின் சாதனையை கைதட்டி பாராட்டினர். சம்யுக்தாவின் தலைமுடியால் காரை இழுத்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனைக்கு பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாணவி சம்யுக்தா நிருபர்களிடம் கூறியதாவது:- கராத்தே பயிற்சி மேற்கொண்டு வரும் நான் அதில் ஒரு முயற்சியாக எனது தலைமுடியால் காரை இழுத்து சாதனை செய்ய வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான பயிற்சியை கடந்த 5 மாதமாக மேற்கொண்டேன். தற்போது கின்னஸ் சாதனைக்கு முயன்றுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story