நேதாஜி மார்க்கெட்டில் கடைகள் அடைப்பு வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்


நேதாஜி மார்க்கெட்டில் கடைகள் அடைப்பு வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 24 Oct 2018 3:15 AM IST (Updated: 24 Oct 2018 2:24 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் புதிதாக கடைகள் கட்டி ஏல முறையில் ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கடைகளை அடைத்துவிட்டு வியாபாரிகள் உண்ணாவிரதம் இருந்தனர்.

வேலூர்,

வேலூர் நகரின் மையப்பகுதியில் நேதாஜி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு 754 நிரந்தர கடைகளும், 250 தரைக்கடைகளும் உள்ளன. இந்த மார்க்கெட்டை நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளனர். இந்த மார்க்கெட்டில் ஒரு நாளைக்கு ரூ.1 கோடி வரை வியாபாரம் நடைபெறுகிறது.

மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து அகற்றிவிட்டு, ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் புதிய கடைகள் கட்ட மாநகராட்சி திட்டம் தயாரித்துள்ளது. மேலும் புதிதாக கட்டப்படும் கடைகளை ஏலமுறையில் ஒதுக்கீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு நேதாஜி மார்க்கெட் டில் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நேதாஜி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்படும் கடைகளை, ஏற்கனவே அங்கு கடை வைத்து வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த நிலையில் ஏலமுறையில் கடைகள் ஒதுக்கீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடையடைப்பு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.

இந்த போராட்டம் காரணமாக நேற்று வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. மார்க்கெட்டிற்கு காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

வேலூர் அண்ணாகலையரங்கம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகளுடன், வேலூர், கிருஷ்ணகிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பினரும் கோரிக்கைகளை வலியுறுத்தி கலந்துகொண்டனர்.

நேதாஜி மார்க்கெட்டில் புதிதாக கட்டப்படும் கடைகளை, அங்கு ஏற்கனவே கடை வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கவேண்டும், பெட்ரோல், டீசல் வரிவிகிதத்தை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவரவேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக 2022-ம் ஆண்டுவரை காலஅவகாசம் வேண்டும், ஆன்லைன் வணிகத்தை தடை செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

உண்ணாவிரத போராட்டத்திற்கு வேலூர் மண்டல தலைவர் கிருஷ்ணன், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினர். வேலூர் மாவட்ட செயலாளர் ஞானவேலு தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு ஓட்டல்கள் சங்க தலைவர் எம்.வெங்கடசுப்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் நேதாஜி மார்க்கெட் வியாபாரிகள் சங்க செயலாளர் பாலு, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், த.மா.கா. மத்திய மாவட்ட தலைவர் பி.எஸ்.பழனி, எல்.கே.எம்.பி.வாசு உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story