திருக்கோவிலூர் அருகே: டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திருக்கோவிலூர் அருகே: டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்கள் திருட்டு - மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 23 Oct 2018 10:00 PM GMT (Updated: 23 Oct 2018 9:15 PM GMT)

திருக்கோவிலூர் அருகே டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திருக்கோவிலூர், 


திருக்கோவிலூர் அருகே அரும்பாக்கத்தில் கள்ளக்குறிச்சி-திருக்கோவிலூர் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் திருக்கோவிலூரை சேர்ந்த கல்யாண்குமார்(வயது 40) என்பவர் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் நேற்று காலை அந்த டாஸ்மாக் கடையின் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்துக்கும், கடை விற்பனையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் பாபு, விற்பனையாளர் கல்யாண் குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கடையை திறந்து பார்வையிட்டனர். அப்போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள 334 மதுபாட்டில்களை காணவில்லை. டாஸ்மாக் கடை கட்டிடத்தின் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் மதுபாட்டில்களை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story