தர்மபுரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Oct 2018 11:00 PM GMT (Updated: 23 Oct 2018 10:15 PM GMT)

ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலைவழங்க கோரி தர்மபுரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி,

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணை தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார்.

மாவட்ட செயலாளர் பிரதாபன், மாவட்ட துணை தலைவர் முருகேசன், மாவட்ட துணைசெயலாளர்கள் பச்சாகவுண்டர், ராஜி, மாவட்ட பொருளாளர் சரோஜா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

விவசாய தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தீபாவளி கருணைதொகையாக தலா ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஊரக வேலைஉறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தகூடாது. விவசாய தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினசரி ஊதியமாக ரூ.500 வழங்க வேண்டும். ஊரக வேலைஉறுதியளிப்பு திட்டத்தை பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரி சீரமைக்கும் பணியில் ஊரக வேலைஉறுதிதிட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். காவிரி ஆற்றின் உபரிநீரை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வத்தல்மலையில் உள்ள 11 கிராமங்களுக்கு ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 133 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில், தேசிய வங்கிகளைபோல் 33 பைசா வட்டியில் பயிர்கடன், கறவை மாட்டு கடன், கால்நடை வளர்ப்பு கடன் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், சாக்கன், ராமச்சந்திரன், பரசுராமன், மல்லையன், முன்னு, முருகன் மல்லிகா உள்பட விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story