கார்த்திகை மகாதீபத் திருவிழா அன்று 2 ஆயிரம் பேர் மட்டும் மலையேற அனுமதி


கார்த்திகை மகாதீபத் திருவிழா அன்று 2 ஆயிரம் பேர் மட்டும் மலையேற அனுமதி
x
தினத்தந்தி 23 Oct 2018 10:19 PM GMT (Updated: 23 Oct 2018 10:19 PM GMT)

கார்த்திகை மகா தீபத்திருவிழா அன்று 2 ஆயிரம் பேர் மட்டும் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பிரசித்தி பெற்ற கார்த்திகை மகாதீபத் திருவிழா அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகாதீபம் 23-ந் தேதி மாலை 6 மணிக்கு 2 ஆயிரத்து 668 அடி உயர மலைஉச்சியில் ஏற்றப்படுகிறது.

தீபத்திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கலெக்டர் கந்தசாமி பேசியதாவது:- தீபத்திருவிழாவின் போது பக்தர்களின் வசதிக்காக 15 முக்கிய இடங்களில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும் 10 மோட்டார்சைக்கிள் ஆம்புலன்சும் பஸ் நிலையம், கோவில் மாடவீதிகள் என முக்கிய இடங்களில் நிறுத்தி வைக்க வேண்டும்.

திருவண்ணாமலைக்கு 2,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. பாதுகாப்பு பணிக்கு 8,500 போலீசார் குவிக்கப்பட உள்ளனர். நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல் தீபத்திருவிழா முடியும் வரை நகரில் டாஸ்மாக் கடை மூடப்படும். பாதுகாப்பு கருதி 2 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தீபம் ஏற்றப்படும் மலைக்கு ஏற அனுமதிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story