அதியமான்கோட்டை அருகே மொபட் மீது கார் மோதல்; கல்லூரி மாணவி பரிதாப சாவு


அதியமான்கோட்டை அருகே மொபட் மீது கார் மோதல்; கல்லூரி மாணவி பரிதாப சாவு
x
தினத்தந்தி 24 Oct 2018 4:45 AM IST (Updated: 24 Oct 2018 3:50 AM IST)
t-max-icont-min-icon

அதியமான்கோட்டை அருகே மொபட் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.

நல்லம்பள்ளி,

மொபட் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை அருகே உள்ள கீழ்கன்னியன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். விவசாயி. இவருடைய மகள் கவுசல்யா (வயது 20). நல்லம்பள்ளி அருகே உள்ள ஒரு தனியார் கலை, அறிவியல் கல்லூரியில் கவுசல்யா பி.எஸ்சி. (கணிதம்) 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் கல்லூரிக்கு மொபட்டில் சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம்.

இதேபோல் நேற்று காலை கவுசல்யா கல்லூரிக்கு சென்றார். பின்னர் மாலை 5 மணியளவில் மொபட்டில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

தடங்கம் மேம்பாலம் அருகே புதிய கோர்ட்டு கட்டிடத்துக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோட்டில் சென்றபோது, அந்த வழியாக வந்த கார், கவுசல்யாவின் மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கவுசல்யா சம்பவ இடத்திலேயே பலியானார். இதை கண்டதும் காரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து டிரைவரை தேடி வருகிறார்கள்.


Next Story