முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது - வைகோ குற்றச்சாட்டு
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரளாவுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுகிறது என வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழ்நாட்டிற்கு சோதனை மேல் சோதனை வந்து கொண்டிருக்கிறது. முல்லை பெரியாறு அணை இருக்கும் இடம், தமிழகத்திற்கு சொந்தமானது. ஆனால் 999 வருடமாக கேரளாவிற்கு குத்தகைக்கு கொடுத்து விட்டோம். இந்த அணையால் 5 மாவட்டங்கள் நீரில் மூழ்குகின்றன. இதனால் அந்த அணையை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய அணையை கட்ட வேண்டும் என கேரள அரசு கூறுகிறது. முல்லை பெரியாறு அணை வலுவாக தான் இருக்கிறது. ஆனால், அவர்கள் குறும்படம், திரைப்படம் எடுத்து இந்த அணையால் கேரளாவிற்கு பாதிப்பு என மக்களை பயமுறுத்துகின்றனர்.
வெள்ளத்தால் கேரளா பாதிக்கப்பட்டபோது, தமிழக மக்கள் தான் அவர்களுக்கு அதிக நிவாரணம் வழங்கி உதவி செய்தார்கள். ஆனால் கேரள அரசு, வெள்ளத்துக்கு முல்லை– பெரியாறு அணை தான் காரணம் என்று கூறி வழக்கு தொடுத்துள்ளது. கேரள மக்களின் ஆதரவை பெற முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு கேரளாவிற்கு ஆதரவாக செயல்படுகிறது. இதன் மூலம் மத்திய அரசு தமிழக மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. இதனை தமிழக மக்கள் மறக்கவும், மன்னிக்கவும் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.