பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் மோதி மயில்கள் இறந்து கடலில் விழுந்த பரிதாபம்
பாம்பன் ரெயில் பாலத்தில் ரெயில் மோதி மயில்கள் இறந்து கடலில் விழும் சம்பவம் நடந்து வருகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் அருகே பாம்பன் ரெயில் பாலத்தை ஒட்டியுள்ள கடற்கரை பகுதி மற்றும் மண்டபம் கடற்கரை பூங்காவை ஒட்டியுள்ள பகுதிகளிலும் ஏராளமான மயில்கள் உள்ளன. இந்த மயில்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் ரெயில் பாலத்தின் உள் பகுதியின் நீண்ட தூரம் வரையிலும் வந்து தண்டவாள பகுதியில் அமர்ந்திருக்கும். இதுபோன்று ரெயில்பாலத்தின் தண்டவாளத்தின் அமர்ந்திருக்கும் மயில்கள் கூட்டத்தை தினமும் ரோடு பாலத்தில் நின்ற படி ஏராளமான சுற்றுலா பயணிகள் ரசித்து செல்வார்கள்.
இந்தநிலையில் பாம்பன் ரெயில் பாலத்தின் உள் பகுதியில் நேற்று மாலை 20–க்கும் மேற்பட்ட மயில்கள் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தன. அப்போது ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ற ரெயிலானது ரெயில் பாலத்தில் மெதுவாக வந்து கொண்டிருந்தது. ரெயில் அருகில் வந்தும் மயில்கள் பறக்காமல் தண்டவாளத்திலேயே அமர்ந்திருந்தன. அப்போது என்ஜின் டிரைவர் மயில்கள் பறக்க ஹாரன் சத்தம் எழுப்பவும் பெரும்பாலான மயில்கள் ஒரே நேரத்தில் பறக்க ஆரம்பித்தன. இதில் எதிர் பாராத விதமாக 2 மயில்கள் மட்டும் இன்ஜின் மோதியதில் பறக்க முடியாமல் கடலில் விழுந்து இறந்து போயின.ரெயில் பாலத்தில் மயில்கள் ரெயிலில் அடிபட்டு இறந்து போகும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வருகின்றது.ரெயில் பாலத்தினுள் ரெயில்கள் நுழைவதை தடுக்கவும்,தேசிய பறவையாக விளங்கும் மயில்களின் இறப்பை தடுக்கவும் ரெயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.