பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை


பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிதாக கட்ட வேண்டும் - ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை
x
தினத்தந்தி 24 Oct 2018 10:00 PM GMT (Updated: 24 Oct 2018 8:24 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகங்கை,

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் தாமஸ் அமலநாதன் தலைமையில் சிவகங்கையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணைத் தலைவர் ஜோசப் ரோஸ், மாநில செயற்குழு உறுப்பினர் புரட்சித்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ஆரோக்கியராஜ், சிங்கராயர், மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவி, ஜெயக்குமார், ஜீவா ஆனந்தி, மாவட்ட துணைத்தலைவர் மாலா, பொருளாளர் குமரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2003–ம் ஆண்டிற்கு பின்பு பணியேற்ற ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.40 ஆயிரம் கோடி எந்த கணக்கின் கீழ் உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும்.

நீதிமன்றத்தில் உறுதி அளித்ததன் அடிப்படையில் பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விலையில்லா பாடப்பொருட்கள் பள்ளிகளுக்கே நேரடியாக வழங்குவதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டார கல்வி அலுவலகங்களில் காலியாக உள்ள அமைச்சு பணியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டியது அவசியம்.

வருகிற 12–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை ஆசிரியர் சந்திப்பு இயக்கம் நடத்துவது என்றும், ஆசிரியர்களின் நியாயமான 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ–ஜியோ சார்பில் அடுத்த மாதம் 27–ந் தேதி முதல் நடைபெற உள்ள தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வது என்றும், மாவட்டம் முழுவதும் உள்ள பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை உடனடியாக அகற்றி விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story