காரைக்கால் கல்லூரியை மூடுவது ஜிப்மரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் - முன்னாள் எம்.பி. ராமதாஸ் கருத்து


காரைக்கால் கல்லூரியை மூடுவது ஜிப்மரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் - முன்னாள் எம்.பி. ராமதாஸ் கருத்து
x
தினத்தந்தி 24 Oct 2018 10:45 PM GMT (Updated: 24 Oct 2018 8:41 PM GMT)

காரைக்காலில் உள்ள மருத்துவ கல்லூரியை மூடுவது ஜிப்மரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் கூறியுள்ளார்.

புதுச்சேரி,

புதுவை முன்னாள் எம்.பி.யும், அ.தி.மு.க. இணை செயலாளருமான ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

காரைக்காலில் செயல்பட்டுவரும் ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் வருகிற கல்வியாண்டில் இருந்து 50 மாணவர்களின் சேர்க்கையை நிறுத்துவது என்று ஜிப்மர் ஆளுமைக்குழு முடிவெடுத்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. ஜிப்மர் மருத்துவ வசதி மையத்தை எம்.பி. என்ற முறையில் என்னுடைய வேண்டுகோளின்படி கடந்த 2009–ம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்த கல்லூரியை மூடுவது என்பதை காரைக்கால் மக்கள் நிச்சயம் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

ஒரு சிறந்த கல்லூரியை 3–வது ஆண்டிலேயே தற்காலிகமாக மூடுவது என்பது ஜிப்மரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். இந்தியாவிலே உள்ள ஒரு தேசிய நிறுவனத்துக்கு எல்லா அதிகாரங்களையும் பெற்ற தன்னாட்சி நிறுவனத்தால் இந்த கல்லூரியை திறம்பட நடத்த முடியவில்லை என்றால் அதன் திறமையை எல்லோரும் சந்தேகப்படக்கூடிய ஒரு நிலை உருவாகி பதற்றத்தை ஏற்படுத்தும்.

காரைக்காலில் உள்ள புதுவை அரசின் மருத்துவமனையை மேம்படுத்த ஜிப்மர் ரூ.50 கோடியை புதுவை அரசுக்கு கொடுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அதன்படி அங்கே உடனடியாக மத்திய பொதுப்பணித்துறை மூலம் வேலையை ஆரம்பிக்க புதுச்சேரி அரசு உடனடி அழுத்தம் கொடுக்கவேண்டும். ஜிப்மரின் மருத்துவக்கிளை ஒன்றினை ஏனாமிற்கு எடுத்துசெல்ல கடினமாக உழைத்துவரும் சுகாதாரத்துறை அமைச்சர் காரைக்கால் மருத்துவமனையின் அகக்கட்டுமானத்தை ஜிப்மரின் நிதியில் ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

வரும் கல்வியாண்டில் சேர இருக்கும் 50 மாணவர்களும் 2 ஆண்டுகளுக்கு பிறகுதான் அதாவது 2021–22ஆம் ஆண்டுதான் கிளினிக்கல் படிப்புக்கு வருவார்கள். அதற்குள் அதற்கு தேவையான அகக்கட்டுமானத்தை உருவாக்கிவிடலாம். ஜிப்மர் தற்போது காரைக்காலில் கட்டியுள்ள பெரிய கட்டிட வளாகத்தில் தக்க மாறுதல்களை செய்து நவீன வகுப்பறைகளையும், நல்ல நூலகத்தையும் பரிசோதனை கூடங்களையும் உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

கல்வியாண்டு தொடங்குவதற்கு இன்னும் 6 மாதங்கள் உள்ளதால் இப்போதே பணிகளை துரித காலத்தில் தொடங்கினால் எல்லாவற்றையும் சரியாக செய்து முடிக்க முடியும். ஜிப்மர் நிர்வாகம் தற்போது பல்வேறு விரிவாக்க பணிகளில் ஈடுபட்டுள்ளதால் அடிப்படை பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதற்கு நேரம் இல்லாததுபோல் தோன்றுகிறது. ஏனாமில் ஜிப்மர் கிளை, புதுவை பல் மருத்துவக்கல்லூரியை ஜிப்மர் எடுத்துக்கொள்வது போன்ற வி‌ஷயங்களெல்லாம் காரைக்கால் மருத்துவக்கல்லூரி நிலைபெறும் வரையில் காத்திருக்கலாம்.

அதுபோன்ற பணிகளுக்கெல்லாம் நேரத்தையும், நிதியையும் செலவிடாமல் காரைக்கால் உயிர்நாடி பிரச்சினையான மருத்துவக்கல்லூரியில் தொடர்ந்து மாணவர்கள் படிப்பதை ஜிப்மரும், புதுவை அரசும் உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


Next Story