கோட்டக்குப்பம் அருகே ரூ.36 லட்சத்தை திருப்பித் தர முடியாமல் வாலிபர் தற்கொலை


கோட்டக்குப்பம் அருகே ரூ.36 லட்சத்தை திருப்பித் தர முடியாமல் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 25 Oct 2018 4:30 AM IST (Updated: 25 Oct 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

கோட்டக்குப்பம் அருகே தீபாவளி சீட்டு பிடித்து ரூ.36 லட்சத்தை திருப்பித் தர முடியாமல் வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் தீபாவளி பண்டிகைக்காக சீட்டு போட்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

வானூர்,

புதுவையை அடுத்த தமிழக பகுதியான கோட்டக்குப்பம் அருகே உள்ள நடுக்குப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் பாலு என்ற ராமகிருஷ்ணன் (வயது 34). இவர் அதே பகுதியில் அலுவலகம் வைத்து தீபாவளி சீட்டு பிடித்து வந்தார். கோட்டக்குப்பம், மரக்காணம், கீழ்புத்துப்பட்டு மற்றும் புதுவையை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள் அவரிடம் சீட்டு பணம் கட்டி வந்தனர்.

மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 12 மாதங்கள் கட்டியவர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் கூடுதலாக சேர்த்து அதாவது ரூ.16 ஆயிரம் தருவதாக பாலு வசூலித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு 10 நாட்களுக்கு முன்பே தருவதாக அவர் உறுதி அளித்து இருந்தார். ஆனால் தெரிவித்தபடி அவரால் பணம் பட்டுவாடா செய்ய முடியவில்லை. இதனால் சீட்டு போட்டவர்கள் பணம் கேட்டு அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். தீபாவளி சீட்டு நடத்தி வசூலித்ததில் சுமார் ரூ.36 லட்சத்தை பாலு பட்டுவாடா செய்ய வேண்டி இருந்ததாக தெரிகிறது.

தொடர்ந்து தாமதம் செய்த வந்ததால் பணம் செலுத்திய சந்தாதாரர்கள் பாலுவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தனது மனைவியிடம் கோட்டக்குப்பத்தில் உள்ள தனது அலுவலகத்தில் தூங்கச் செல்வதாக கூறி விட்டுச் சென்றார்.

நேற்று காலை நீண்டு நேரமாகியும் பாலு வீட்டுக்கு வராததால் அவரது மனைவி சந்தேகமடைந்து செல்போனில் தொடர்பு கொண்டார். போனையும் எடுக்காததால் அலுவலகத்துக்கு சென்று பார்த்த போது அங்கு பாலு மின்விசிறியில் தூக்குப் போட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு பாலுவின் மனைவி ரஞ்சனி தகவல் கொடுத்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக புதுவை பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story