சபரிமலை: கத்தியால் தங்கள் உடலை கீற 20 பக்தர்கள் தயாராக இருந்தனர் - போராட்டக்குழு தலைவர் தகவல்


சபரிமலை: கத்தியால் தங்கள் உடலை கீற 20 பக்தர்கள் தயாராக இருந்தனர் - போராட்டக்குழு தலைவர் தகவல்
x
தினத்தந்தி 25 Oct 2018 3:45 AM IST (Updated: 25 Oct 2018 2:36 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து இருந்தால், கத்தியால் தங்கள் உடலை கீறி ரத்தம் சிந்தி கோவிலை மூட வைக்க 20 பக்தர்கள் திட்டமிட்டு இருந்ததாக போராட்டக்குழு தலைவர் தெரிவித்தார்.

கொச்சி,

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து, ஐப்பசி மாத பூஜைக்காக கடந்த 17-ந் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது.

10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காக, அய்யப்ப தர்ம சேனா அமைப்பின் தலைவர் ராகுல் ஈஸ்வர் உள்பட 20 பேர் 18-ந் தேதி கைது செய்யப்பட்டனர்.

அதன்பிறகும் தினந்தோறும் அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களின் எதிர்ப்பால், கோவிலுக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையே, கைது செய்யப்பட்ட ராகுல் ஈஸ்வர், ஜாமீனில் விடுதலை ஆகி உள்ளார். அவர் கொச்சியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எங்கள் எதிர்ப்பையும் மீறி, குறிப்பிட்ட வயது பெண்கள் அய்யப்பன் கோவிலுக்குள் நுழைந்து இருந்தால், கோவிலை மூட வைக்க ரகசிய திட்டம் தீட்டி இருந்தோம். அதன்படி, கோவில் வளாகத்தில் சுமார் 20 பக்தர்கள் கத்தியால் தங்கள் உடலை கீறி, ரத்தம் சிந்தி, கோவிலை மூடச்செய்ய தயாராக இருந்தனர்.

கோவில் தரையில் ரத்தம் பட்டால், அர்ச்சகர்கள் கோவிலை மூடி விடுவார்கள் என்பதே எங்கள் கணக்கு. அதன்பிறகு, கோவிலை சுத்தப்படுத்துவதற்காக, 3 நாட்கள் கோவில் மூடப்பட்டு இருக்கும். ஆனால், இந்த திட்டத்தை செயல்படுத்த விடாமல், போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர்கள் தடுத்து விட்டனர்.

இருப்பினும், வருடாந்திர சீசனுக்காக 3 மாத காலம் அய்யப்பன் கோவில் நடை திறந்து இருக்கும். அப்போது, குறிப்பிட்ட வயது பெண்களை கோவிலுக்குள் நுழைய அனுமதித்தால், மேற்கண்ட திட்டத்தை பக்தர்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது.

நான் தந்திரி குடும்பத்தை சேர்ந்தவன். அய்யப்பன் கோவில், திருவிதாங்கூர் தேவஸ்தானம் போர்டுக்கு சொந்தமானது என்று கேரள அரசு கூறுவதை ஏற்க முடியாது. இது, கடவுள் அய்யப்பனுக்கு சொந்தமானது.

இவ்வாறு ராகுல் ஈஸ்வர் கூறினார்.


Next Story