தங்கத்தில் முறைகேடு செய்ததாக வழக்கு: காஞ்சீபுரம் கோவில் சிலைகள், கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு


தங்கத்தில் முறைகேடு செய்ததாக வழக்கு: காஞ்சீபுரம் கோவில் சிலைகள், கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 25 Oct 2018 11:15 PM GMT (Updated: 25 Oct 2018 6:43 PM GMT)

தங்கத்தில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் காஞ்சீபுரம் கோவில் சிலைகள் நேற்று கும்பகோணம் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டன.

கும்பகோணம்,

காஞ்சீபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சோமாஸ்கந்தர் உற்சவர் சிலை சிதிலம் அடைந்து விட்டதாக கூறி புதிய சிலையை வடிவமைக்க இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்தது.

சோமாஸ்கந்தர் பழைய உற்சவர் சிலையில் 75 சதவீதம் தங்கம் இருந்ததாகவும், அதன் மதிப்பு பல கோடி ரூபாய் எனவும் கூறப்பட்டு வந்த நிலையில் புதிய சிலையை வடிவமைக்க முடிவு செய்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த 2016-ம் ஆண்டு புதிதாக சோமாஸ்கந்தர் சிலையும், ஏழவார்குழலி அம்மன் சிலையும் வடிவமைக்கப்பட்டது. அதில் 5.45 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் தரப்பில் கூறினார்கள்.

இந்த நிலையில் ஏகாம்பரநாதர் கோவிலில் புதிய சிலைகளை வடிவமைத்ததில் முறைகேடு நடைபெற்று இருப்பதாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து கோவிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் பழைய உற்சவர் சிலை, புதிதாக வடிவமைக்கப்பட்ட சிலைகள் உள்பட 4 சிலைகளில் உரிய அளவு தங்கம் இருக்கிறதா? என நவீன கருவிகளின் உதவியுடன் சோதனை செய்தனர்.

இதில் சிலைகளில் குறிப்பிட்ட அளவு தங்கம் இல்லை என்பதும், தங்கத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. முறைகேடு தொடர்பாக ஏகாம்பரநாதர் கோவில் இணை ஆணையர் கவிதா உட்பட 9 பேர் மீது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது காஞ்சீபுரம் கோவிலுக்கு சொந்தமான சோமாஸ்கந்தர் மற்றும் ஏழவார்குழலி அம்மன் சிலையை கோர்ட்டில் ஒப்படைத்தனர். அவற்றை கோர்ட்டு ஊழியர்கள் அளவீடு செய்தனர். இதில் சோமாஸ்கந்தர் சிலை 2 அடி உயரமும், 110 கிலோ எடையும் இருந்தது. ஏழவார்குழலி அம்மன் சிலை 3 அடி உயரமும், 60 கிலோ எடையும் இருந்தது. இதையடுத்து 2 சிலைகளும் கும்பகோணம் நாகேஸ்வரன் கோவிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் வைக்கப்பட்டன. 

Next Story