வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபர்


வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால் செல்போன் கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்த வாலிபர்
x
தினத்தந்தி 26 Oct 2018 3:45 AM IST (Updated: 26 Oct 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

வேலைக்கு செல்லாததை மனைவி கண்டித்ததால், செல்போன் கோபுரத்தில் ஏறி கணவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

காரைக்குடி,

செட்டிநாடு போலீஸ்சரகம் சூரக்குடியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 26). இவருடைய மனைவி நந்தினி (21), இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் சதீஷ் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்தாராம். இதை மனைவி கண்டித்துள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது குழந்தையை தூக்கி கொண்டு நந்தினி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

இதைப்பார்த்த சதீஷ், வீட்டின் அருகில் இருந்த தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, தனது போன் மூலம் நண்பர்கள், உறவினர்களுக்கு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கீழே இறங்க கூறிய போது, தனது மனைவியும், குழந்தையும் வீட்டிற்கு வந்தால் தான் இறங்குவேன், இல்லையென்றால் மேலே இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விட்டார்.

இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து செட்டிநாடு போலீசார், காரைக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தீயணைப்பு படையினர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் நந்தினியை அழைத்து, போனில் கணவருடன் பேச வைத்தனர். அதையடுத்து சதீஷ் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். அவரை போலீசார் எச்சரித்து, அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story