திருச்சியில் விமானம் மோதி சேதம் அடைந்த ஆன்டனாக்கள் சீரமைப்பு


திருச்சியில் விமானம் மோதி சேதம் அடைந்த ஆன்டனாக்கள் சீரமைப்பு
x
தினத்தந்தி 25 Oct 2018 10:45 PM GMT (Updated: 25 Oct 2018 9:02 PM GMT)

திருச்சியில் விமானம் மோதி சேதம் அடைந்த ஆன்டனாக்கள் சீரமைக் கப்பட்டன.

செம்பட்டு,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 130 பயணிகள் மற்றும் 6 ஊழியர்களுடன் துபாய்க்கு புறப்பட்டது. அந்த விமானம் ஓடுதள பாதையில் சிறிதுதூரம் சென்றவுடன் மேலே எழும்பியது. அப்போது தரைமட்டத்தில் இருந்து தாழ்வான உயரத்தில் பறந்ததால் விமானத்தின் இரு சக்கரங்கள் விமானநிலைய வளாக சுற்றுச்சுவர் முன்பு அமைக்கப்பட்டு இருந்த ஆன்டனா கருவிகள் மீது மோதியது. இதையடுத்து சுற்றுச்சுவரின் இருபுறத்திலும் மோதிவிட்டு நிற்காமல் பறந்து சென்றது. இந்த விபத்தில் ஓடுதள பாதையை அடையாளம் காட்டும் விளக்குகள், ஆன்டனா உள்ளிட்ட கருவிகள் சேதம் அடைந்தன.

விபத்துக்குள்ளான விமானத்தின் அடிப்பகுதியும் சேதம் அடைந்தது. ஆனால் இந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். அந்த விமானம் மும்பையில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் மாற்று விமானம் மூலம் துபாய்க்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விமான விபத்து குறித்து விமானநிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து டெல்லியில் இருந்து விமான போக்குவரத்து ஆணையத்தை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் திருச்சிக்கு வந்து ஆய்வு செய்தனர். விபத்துக்கான காரணம் என்ன?. விமானியின் கவனக்குறைவினால் விபத்து ஏற்பட்டதா? என்பது உள்பட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையே விமானநிலைய வளாகத்தில் சேதம் அடைந்த ஆன்டனா கருவிகளை சீரமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. தொழில்நுட்ப வல்லுனர்கள் அடங்கிய குழுவினர் திருச்சியில் முகாமிட்டு இதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர். தற்போது ஆன்டனா உள்ளிட்ட கருவிகள் சீரமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவை இன்னும் முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. சோதனை செய்தபிறகு தான் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story