விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்க கோரிக்கை
ரெயில்பாதையில் பராமரிப்பு பணிகள் காரணமாக விருதுநகர், மதுரை, நெல்லை இடையே ரெயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளதால் ரெயில் பயணிகளுக்கு வசதியாக விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மதுரை– நெல்லை இடையே இருவழி ரெயில் பாதை பணி நடந்து வருவதால் விருதுநகர்–நெல்லை, விருதுநகர்–மதுரை இடையே சில பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டு உள்ளது. செங்கோட்டை–மதுரை மற்றும் பாலக்காடு, திருச்செந்தூர் பயணிகள் ரெயில் விருதுநகரில் நிறுத்தப்பட்டு விடுகிறது. இந்த மாற்றம் தெரியாத பயணிகள் விருதுநகர் ரெயில் நிலையத்துக்கு வந்து திரும்பி செல்லவேண்டிய நிலை ஏற்படுகிறது. விருதுநகரில் நிறுத்தப்படும் ரெயில்களில் வரும் பயணிகள், ரெயில் நிலையத்தில் இறங்கி தங்களது ஊர்களுக்கு செல்ல பஸ் நிலையத்துக்கு செல்லவேண்டிய நிலை உள்ளது.
ஆனால் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ள ரெயில்வே நிர்வாகம் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையம் செல்ல கூடுதல் பஸ் வசதிகள் செய்யவில்லை. இதனால் ரெயில் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது. கூடுதல் கட்டணம் கொடுத்து ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து கழக நிர்வாகமும் இந்த பிரச்சினை குறித்து கண்டுகொள்ளாத நிலையே இருந்துவருகிறது.
எனவே ரெயில்வே நிர்வாகம் மாவட்ட, போக்குவரத்து கழக நிர்வாகத்திடம் கலந்துபேசி ரெயில்போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும்வரை விருதுநகர் ரெயில் நிலையத்தில் இருந்து பஸ் நிலையத்திற்கு கூடுதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.