தர்மபுரியில் கிளன் தகடூர் மாரத்தான் போட்டி - வலைதளத்தை உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்


தர்மபுரியில் கிளன் தகடூர் மாரத்தான் போட்டி - வலைதளத்தை உதவி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 26 Oct 2018 11:00 PM GMT (Updated: 26 Oct 2018 9:09 PM GMT)

தர்மபுரியில் நடைபெற உள்ள கிளன் தகடூர் மாரத்தான் போட்டிக்கான வலைதளத்தை உதவி கலெக்டர் சிவன் அருள் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தமிழக அரசு ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த 1.1.2019 முதல் நிரந்தர தடை விதித்துள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள பொதுமக்களுக்கு இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சுடர் வெல்பேர் பவுண்டேஷன் தர்மபுரி இணைந்து வருகிற ஜனவரி மாதம் 6-ந் தேதி கிளன் தகடூர் மெகா மாரத்தான் போட்டியினை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான பிரத்யேக லோகோ மற்றும் www.chu-d-ar.co.in வலைதளத்தை தர்மபுரி உதவி கலெக்டர் சிவன் அருள் வெளியிட்டு முன்பதிவினை தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி வருகிற ஜனவரி மாதம் 6-ந் தேதி காலை 7 மணிக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி முதல் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டல்பட்டி சசி ஞானோதயா அகாடமி சி.பி.எஸ்.இ. பள்ளி வரை நடைபெறுகிறது.

இந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்பவர்களுக்கு டி சர்ட், தொப்பி, சான்றிதழ் மற்றும் முதல் பரிசாக ரூ.15,000, இரண்டாம் பரிசாக ரூ.10,000, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என மொத்தம் 4 வயது பிரிவினருக்கு ரூ.1,20,000 வரை மதிப்புள்ள ரொக்க பரிசுத்தொகையும் வழங்கப்படும். மாரத்தான் போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் மற்றும் வீரர், வீராங்கனைகள், பொதுமக்கள் என அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொள்ள www.chu-d-ar.co.in என்ற வலைதளத்தில் ஆன்-லைன் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு மையங்களிலும் தங்களது பெயர், தொலைபேசி எண் கொடுத்து பதிவு செய்யலாம். இதற்கு வயது வரம்பு எதுவும் இல்லை.

எனவே மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் இந்த போட்டியில் கலந்துகொண்டு பிளாஸ்டிக் இல்லா தர்மபுரியை உருவாக்குவோம் என உறுதி கொள்வோம் என்று உதவி கலெக்டர் சிவன் அருள் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் ராதாகிருஷ்ணன், பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் ப.பாஸ்கர், சுடர் வெல்பேர் பவுண்டேஷன் நிறுவனர்கள் ப.அரங்கநாதன், ச.இன்னிசை அரங்கநாதன், சுடர்வெல்பேர் பவுண்டேஷன் செயல் உறுப்பினர்கள் குமரப்பன், பிரேம்குமார், ரவிகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Next Story