ரெயிலில் இருந்து தவறிவிழுந்து கட்டிட தொழிலாளி பலி - நாமக்கல்லில் பரிதாபம்


ரெயிலில் இருந்து தவறிவிழுந்து கட்டிட தொழிலாளி பலி - நாமக்கல்லில் பரிதாபம்
x
தினத்தந்தி 27 Oct 2018 3:45 AM IST (Updated: 27 Oct 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

நண்பன் தவறவிட்ட பொருட்களை எடுக்க சென்றபோது ரெயிலில் இருந்து தவறிவிழுந்து கட்டிட தொழிலாளி பலியானார்.

நாமக்கல்,

நண்பன் தவறவிட்ட பொருட்களை எடுக்க சென்றபோது ரெயிலில் இருந்து தவறிவிழுந்து கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பீகார் மாநிலத்தை சேர்ந்த பங்காளிதாஸ் மகன் முகேஷ்தாஸ் (வயது 36). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் நாமக்கல்லில் தங்கி டைல்ஸ் ஒட்டும் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று காலை கரூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற ரெயிலில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அப்பகுதி முழுவதும் பரவியதால் பொதுமக்கள் நாமக்கல் ரெயில் நிலையத்தில் திரண்டனர்.

இதற்கிடையே சம்பவ இடத்திற்கு சென்ற ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம், ஏட்டு செல்லப்பன் ஆகியோர் முகேஷ் தாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், நண்பர் ரெயிலில் தவறவிட்ட பொருட்களை ரெயிலில் இருந்து முகேஷ் தாஸ் எடுக்க சென்ற போது தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

நேற்று காலை முகேஷ் தாஸ் நண்பர் தோஷி என்பவர் கரூரில் இருந்து சேலத்திற்கு செல்லும் பயணிகள் ரெயிலில் சேலம் செல்வதற்காக திட்டமிட்டு உள்ளார். அதற்காக கரூர் ரெயில் நிலையம் சென்ற தோஷி, அங்கிருந்த பயணிகள் ரெயிலில் அவரது உடைமைகளை வைத்துவிட்டு டீ குடிக்க கீழே இறங்கி உள்ளார்.

அந்த நேரத்தில் ரெயில் கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி புறப்பட்டு விட்டது. இதனால் தோஷியின் பொருட்கள் ரெயிலிலேயே மாட்டிக்கொண்டது. பின்னர் தோஷி, நாமக்கல்லில் இருந்த முகேஷ் தாசை தொடர்பு கொண்டு அவரது பொருட்களை ரெயிலில் இருந்து இறக்கி வைக்குமாறு கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து முகேஷ்தாஸ் நாமக்கல் ரெயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அவர் சேலம் நோக்கி புறப்பட்ட ரெயிலில் ஏறி தோஷியின் பொருட்களை எடுத்துக்கொண்டு கீழே இறங்க முற்பட்டு உள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரெயிலில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்து உயிரிழந்தார். இருப்பினும் சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

Next Story