மானாமதுரையில் குண்டும் குழியுமான ரெயில் நிலைய சாலையால் பயணிகள் அவதி
மானாமதுரையில் குண்டும் குழியுமான ரெயில்நிலைய சாலையால் அந்த வழியாக செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரை,
மானாமதுரை ரெயில் நிலையம் தமிழகத்தில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட ஏழு ரெயில் நிலையங்களில் ஒன்று. சுற்றுலா தலமான ராமேசுவரத்திற்கு செல்லும் அனைத்து ரெயில்களும் மானாமதுரை வழியாகத்தான் செல்ல முடியும். இதனால் மானாமதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் என்ஜினுக்கு தேவையான டீசல் நிரப்பும் வசதி உள்ளது.
மேலும் பயணிகளின் வசதிக்காக ரெயிலில் குடிநீர் நிரப்பும் வசதியும் இங்கு உள்ளது. தினசரி ராமேசுவரம்–மதுரை, திருச்சி–ராமேஸ்வரம், விருதுநகர்–திருச்சி ஆகிய பயணிகள் ரெயில்களும், சென்னை, ராமேசுவரம், திருப்பதி, ஓகா, கோவை, கன்யாகுமரி உள்ளிட்ட விரைவு ரெயில்களும் வந்து செல்கின்றன. இதனால் இங்கு தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மானாமதுரை சந்திப்பில் வந்து செல்கின்றனர்.
மானாமதுரை நகரில் இருந்து ஒரு கி.மீ தூரத்திற்கு ரெயில்நிலைய சாலை உள்ளது இந்த ரோட்டை அதிகாரிகள் முறையாக பராமரிப்பு செய்யாததால், பல இடங்களில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. மழை காலங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் தண்ணீர் தேங்கி நிற்பதால், பலரும் அதில் விழுந்து காயமடைகின்றனர்.
இந்த பகுதியில் ரெயில்வே உயர் அதிகாரிகள் ரெயில்நிலையத்திற்கு வரும் போது மட்டும், சாலைகள் பெயரளவில் சீரமைக்கப்படுகின்றன. மற்ற நேரங்களில் சாலை பயனற்று, இந்த வழியாக செல்லும் பயணிகள் நடக்க முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே ரெயில்வே நிர்வாகம் ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்