திருச்சி-விழுப்புரம் இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை


திருச்சி-விழுப்புரம் இடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை
x
தினத்தந்தி 28 Oct 2018 3:02 AM IST (Updated: 28 Oct 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி - விழுப்புரம் இடையே தண்டவாள பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. இதனை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

திருச்சி,

திருச்சி-விழுப்புரம் இடையே மின்மயமாக்கப்பட்ட இருவழி அகல ரெயில் பாதையில் மின்சார என்ஜின் இணைக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களை பொறுத்தவரை திருச்சி-விழுப்புரம் இடையே 80 கிலோ மீட்டர் முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.

இந்தநிலையில் திருச்சி- விழுப்புரம் இடையே இருவழி அகல ரெயில் பாதையில், ரெயிலின் வேகத்தை அதிகரிக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதிகபட்சமாக எக்ஸ்பிரஸ் ரெயில்களை 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று காலை 9.15 மணிக்கு மின்சார ரெயில் என்ஜினில் 3 பெட்டிகள் இணைக்கப்பட்டு விழுப்புரத்திற்கு புறப்பட்டு சென்றது.

இந்த ரெயிலில் திருச்சி கோட்ட என்ஜினீயரிங் பிரிவு அதிகாரிகள் பயணம் செய்தனர். இந்த ரெயில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற போது தண்டவாளத்தில் அதிர்வு ஏற்படுகிறதா? ரெயிலை தொடர் வேகத்தில் இயக்க முடிகிறதா? என அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் திருச்சியில் இருந்து விழுப்புரம் வரை செல்லும் போது ஒரு தண்டவாள பாதையிலும், விழுப்புரத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த போது மற்றொரு தண்டவாள பாதையிலும் ரெயில் அதிவேகமாக இயக்கப்பட்டது. இந்த சோதனை ஓட்டத்தை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகத்திற்கு தகவல் அளிக்கப்படும். அதன்பின் இந்த வழித்தடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 120 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதி வழங்கப்படும். நேற்று நடந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக முடிந்ததாக ரெயில்வே வட்டாரத்தில் தெரிவித்தனர்.

Next Story