திருச்சி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்கு நிலம் விரைவில் கையகப்படுத்தப்படும்


திருச்சி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்கு நிலம் விரைவில் கையகப்படுத்தப்படும்
x
தினத்தந்தி 28 Oct 2018 3:05 AM IST (Updated: 28 Oct 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்கு நிலம் விரைவில் கையகப்படுத்தப்படும் என ஆலோசனை குழு தலைவர் குமார் எம்.பி. தெரிவித்தார்.

செம்பட்டு,

திருச்சி விமானநிலைய ஆலோசனை குழு கூட்டம் விமானநிலையத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு ஆலோசனை குழு தலைவர் குமார் எம்.பி. தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், விமானநிலைய இயக்குனர் குணசேகரன் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கம், புதிய ஏப்ரான், உயர் மட்ட கோபுரம், புதிய முனைமம் கட்டுவதற்கான பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டம் முடிந்ததும் குமார் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

திருச்சி விமானநிலையம் கடந்த நிதியாண்டில் ரூ.38 கோடியே 13 லட்சம் லாபம் அடைந்திருக்கிறது. நடப்பு நிதியாண்டில் இதனை ரூ.40 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான வழிமுறைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பெருநகரங்கள் அல்லாத விமானநிலையங்களில் வருவாய் ஈட்டுவதில் திருச்சி விமானநிலையம் முதல் இடத்தில் உள்ளது. இதேபோல பயணிகள் சேவையிலும் திருச்சி விமானநிலையம் முன்னிலை பெற்றுள்ளது. தேசிய அளவில் 4-வது இடத்தையும், தென்னிந்திய அளவில் முதல் இடத்தையும் திருச்சி பிடித்துள்ளது. திருச்சி விமானநிலைய ஓடுபாதை விரிவாக்கத்திற்கான பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 345.6 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான தாசில்தார்கள் உள்பட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு விட்டனர். தீபாவளி பண்டிகை முடிந்ததும் அமைச்சர், கலெக்டர், அதிகாரிகள் தலைமையில் ஒரு கூட்டம் நடத்தப்படும்.

ஓடுபாதை விரிவாக்கத்திற்கான நிலம் விரைவில் கையகப்படுத்தப்படும். மொத்தம் 8 கட்டமாக நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. கீழக்குறிச்சி, கீழகல்கண்டார்கோட்டை பகுதியை சேர்ந்த 35 பேர் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை கோர்ட்டில் எதிர்கொள்ளப்படும்.

செம்பட்டு பட்டத்தம்மாள் தெருவில் வசிப்பவர்களுக்கு குளவாய்ப்பட்டி பகுதியில் 17 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மின் விளக்கு வசதி உள்பட அடிப்படை வசதிகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும். மேலும் பட்டத்தம்மாள் தெருவில் கையகப்படுத்தப்படும் நிலத்தின் உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும். மேலும் முதல் கட்டமாக 16.40 ஹெக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான மதிப்பீடு வழங்க நில நிர்வாக ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சி விமானநிலையத்தில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை அதிகரிக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருச்சி விமானநிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையம், ரெயில் நிலையத்திற்கும், வெளியூர்களுக்கும் பஸ்கள் கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

திருச்சி விமானநிலைய இயக்குனர் குணசேகரன் கூறுகையில், “திருச்சி விமானநிலையத்திற்கு புதிய முனையம் ரூ.950 கோடியில் கட்டப்பட உள்ளது. இதற்கான நில அளவீடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புதிய முனைய அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் வருவாரா? என்பது குறித்து பதில் இல்லை. துபாய் விமானம் மோதியதில் சேதமடைந்த ஆன்டெனா கருவிகள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. புதுடெல்லியில் இருந்து வருகிற 29-ந்தேதி அதிகாரிகள் குழுவினர் வருகை தந்து புதிய கருவியை ஆய்வு மேற்கொண்டபின் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்படும்” என்றார்.

Next Story