உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா? நாராயணசாமிக்கு, கிரண்பெடி சவால்


உண்மை கண்டறியும் சோதனைக்கு தயாரா? நாராயணசாமிக்கு, கிரண்பெடி சவால்
x
தினத்தந்தி 28 Oct 2018 11:45 PM GMT (Updated: 28 Oct 2018 8:04 PM GMT)

உண்மை கண்டறியும் சோதனைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி தயாரா? என்று கவர்னர் கிரண்பெடி சவால் விடுத்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்–அமைச்சர் நாராயணசாமிக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் குற்றஞ்சாட்டுவதும், விதிமுறைகளை மீறி செயல்படுவதாக புகார் கூறுவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது.

நேற்று முன்தினம் பேட்டியளித்த முதல்–அமைச்சர் நாராயணசாமி, பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் சம்பளத்துக்கு கோப்பு அனுப்பினால் அதை திருப்பி அனுப்பிவிட்டதாகவும், பாப்ஸ்கோ தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.7.5 கோடி கேட்டு அனுப்பிய கோப்பிற்கும் அனுமதி அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.

முதல்–அமைச்சர் நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக கவர்னர் கிரண்பெடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–

முதல்–அமைச்சர் நாராயணசாமி முழுமையான தகவல்களை மக்களுக்கு அளிப்பதில்லை. பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க ரூ.7.50 கோடிக்கு கோப்புகள் அனுப்பப்பட்டது. ஆனால் முறையான அனுமதியின்றி அனுப்பப்பட்டதால் அது திருப்பி அனுப்பப்பட்டது.

குடிமைப்பொருள் வழங்கல் துறையில் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குதற்கு என்று நிதி ஏதும் கிடையாது.

மேலும் நிதிக்காக வாரியத்தின் இயக்குனர்கள் முடிவு செய்து நிதி கேட்பதுபோன்றோ அதை திருப்பி வழங்குவதற்கான வழிமுறைகள் ஏதும் குறிப்பிடப்படவில்லை. சட்டமன்றம் அனுமதி வழங்காத நிலையில் கவர்னர் அனுமதி அளிப்பதில்லை. இன்னும் பல கேள்விகள் உள்ளன. முதல்–அமைச்சரின் பதிலை பொறுத்து அவை கேட்கப்படும்.

முதல்–அமைச்சர் தனது மக்களுக்கு முழுமையான தகவலை அளிக்கவேண்டும். கவர்னரின் அலுவலகம் அவரது குற்றச்சாட்டுகள், பொய்களுக்கு பதில் அளித்து வருகிறது. இதுதொடர்பாக உண்மை கண்டறியும் சோதனைக்கு நான் தயாராக உள்ளேன். முதல்–அமைச்சர் தயாரா?

இவ்வாறு கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.


Next Story