நீதிபதிகளும், வக்கீல்களும் ஒருங்கிணைந்து நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்கவேண்டும் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வேண்டுகோள்


நீதிபதிகளும், வக்கீல்களும் ஒருங்கிணைந்து நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்கவேண்டும் - ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வேண்டுகோள்
x
தினத்தந்தி 29 Oct 2018 5:00 AM IST (Updated: 29 Oct 2018 1:34 AM IST)
t-max-icont-min-icon

நீதிபதிகளும், வக்கீல்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி பேசினார்.

புதுச்சேரி,

புதுவை ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிடத்தில் 3–வது மாடியில் 9 கோர்ட்டு கட்டிடங்கள் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. இந்த கட்டிடங்களை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி திறந்துவைத்தார்.

அப்போது தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி பேசியதாவது:–

மக்கள் எல்லோருக்கும் நீதி கிடைக்கும் நோக்கத்தில் திறக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தில் 9 வழக்காடு நீதிமன்றங்களும், நிர்வாக அலுவலகங்களும் வருகின்றன. குறிப்பாக சி.பி.ஐ., லஞ்ச ஒழிப்பு, பெண்கள், குழந்தைகள் என தனித்தனி வழக்காடு மன்றங்கள் வருகின்றன.

கடற்கரை சாலையில் உள்ள பழைய கோர்ட்டு கட்டிடத்தை அருங்காட்சியகமாகவும், விருந்தினர் விடுதியாகவும் மாற்றியமைக்கும் பணியும் பொதுப்பணித்துறை மூலம் நடந்து வருகிறது. நீதிமன்றங்கள் மக்களுக்கு நீதியை வழங்கும் கோவில்கள். அதில் உள்ள தூண்கள்தான் வக்கீல்கள்.

தூண்கள் இல்லாமல் கோவில்கள் இருக்காது. எனவே நீதிபதிகளும், வக்கீல்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு நீதிமன்றத்தின் கண்ணியத்தை காக்க வேண்டும். சமுதாயம், பொருளாதாரம், அரசியல் தொடர்பான நீதி அனைவருக்கும் கிடைக்கவேண்டும்.

சட்ட சேவை மையங்கள் மாணவர்களுக்கு சட்டம் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முகாம்கள், கருத்தரங்குகளை நடத்த வேண்டும். சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கும் உதவிட வேண்டும் என்ற உண்ணம் இதன் மூலம் மாணவர்களிடையே வளரும். இந்த முயற்சிகள் விரைவில் பலனிளிக்கும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு தலைமை நீதிபதி விஜய கமலேஷ் தகில்ரமணி பேசினார்.


Next Story