நாமக்கல்லில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


நாமக்கல்லில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 Oct 2018 10:00 PM GMT (Updated: 29 Oct 2018 5:36 PM GMT)

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல், 
நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அங்கன்வாடி பணியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். இதேபோல் அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் அலுவலக உதவியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கண்ணகி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயக்கொடி, துணை தலைவர் பாண்டியம்மாள், துணை செயலாளர் கலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் அரசு ஊழியருக்கு வழங்குவது போல, பணிக்கொடை வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களாக பணிபுரிந்து 1.4.2003-க்கு பிறகு பதவி உயர்வு பெற்ற மேற்பார்வையாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

குறுமைய பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் மேற்பார்வையாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு 9 மாதங்கள் வழங்க வேண்டும். உதவியாளர்கள் பதவி உயர்வு பெறுவதற்கான கால அளவை 10 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக மாற்றி அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

முன்னதாக அவர்கள் நாமக்கல் தெற்கு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்து அரசு ஆஸ்பத்திரி, மணிக்கூண்டு வழியாக ஊர்வலமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்தனர்.

Next Story