மணப்பாறை அருகே காய்ச்சலால் சிறுவர், சிறுமிகள் அவதி மருத்துவ முகாம் அமைக்க கோரிக்கை


மணப்பாறை அருகே காய்ச்சலால் சிறுவர், சிறுமிகள் அவதி மருத்துவ முகாம் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 30 Oct 2018 3:45 AM IST (Updated: 30 Oct 2018 2:15 AM IST)
t-max-icont-min-icon

மணப்பாறை அருகே காய்ச்சலால் சிறுவர்-சிறுமிகள் அவதிப்பட்டு வீடுகளுக்குள் முடங்கி கிடப்பதாகவும், அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மணப்பாறை,
தமிழகத்தில் தற்போது டெங்கு, பன்றி காய்ச்சலால் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல, மணப்பாறையை அடுத்த திருநெல்லிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கார்வாடி வடக்கிக்களம் கிராமத்தில் பல சிறுவர், சிறுமிகள் கடந்த ஒரு வாரமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

அருகில் உள்ள சுக்காம்பட்டி மற்றும் வளநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவர்கள் சிகிச்சை பெற்றாலும் காய்ச்சல் முழுமையாக குணமடையவில்லை. இதனால் மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருந்தாலும், இந்த பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. பல்வேறு இடங்களில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த பகுதியில் அப்படி எதுவும் நடைபெறவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே, கார்வாடி வடக்கிக்களம் கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story