பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வது பற்றிய ஆலோசனை கூட்டம் திருச்சி உள்பட 7 மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்


பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வது பற்றிய ஆலோசனை கூட்டம் திருச்சி உள்பட 7 மாவட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்
x
தினத்தந்தி 30 Oct 2018 4:15 AM IST (Updated: 30 Oct 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

பிளாஸ்டிக் பொருட் களை தடை செய்வது பற்றி திருச்சி உள்பட 7 மாவட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

திருச்சி தில்லைநகரில் உள்ள இந்திய மருத்துவ கழக அலுவலகத்தில் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர் மற்றும் கரூர் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சிகளின் செயல் அலுவலர்கள், திருச்சி மாநகராட்சி ஆணையர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிலக உரிமையாளர்கள், மாற்றுப் பொருள் தயாரிக்கும் தொழிலக உரிமையாளர்களுடனான ஒருமுறை பயன்படுத்தி கழிவாக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது பற்றிய கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் செல்வன் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு அரசு சில குறிப்பிட்ட வகை பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு மற்றும் உபயோகத்தினை தடை செய்யும் பொருட்டு, அரசாணை வெளியிட் டுள்ளது. இந்த அரசாணையில், ஒருமுறை பயன்படுத்தி குப்பையில் போடப்படும் பிளாஸ்டிக் பொருட்களான தூக்கு பைகள், பிளாஸ்டிக் டம்ளர்கள், உறிஞ்சுக் குழாய்கள் போன்றவைகளை வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியிலிருந்து தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும் தடை செய்யப்பட்டு இருப்பதால் அதனை அமல்படுத்துவது பற்றி கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் அதிகாரிகளுக்கு விளக்கி கூறினார்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த உள்ளாட்சி அமைப்பினர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் தொழிலக உரிமையாளர்களும் மாசுக் கட்டுப்பாடு வாரிய அலுவலர்களுடன் கலந்தாலோசித்தனர்.தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய திருச்சி மண்டல இணைத்தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் குமார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார்.

Next Story