வேன்–கார் மோதி விபத்து: குழந்தைகள் உள்பட 4 பேர் பலி; 27 பேர் காயம்
கார்–வேன் மோதிக்கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியானார்கள். 27 பேர் காயம் அடைந்தனர். ராமேசுவரத்தில் திதி கொடுத்துவிட்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நடந்தது.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் சித்தி விநாயகம். இவர் தற்போது மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனது உறவினருக்கு திதி கொடுப்பதற்காக சித்திவிநாயகம், அவருடைய மனைவி ராகசுதா, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் என 10 பேருடன் ஒரு காரில் ராமேசுவரம் சென்றார். அவர்கள் திதி கொடுத்து விட்டு நேற்று காலை ராமேசுவரத்தில் இருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
ராமநாதபுரம் அருகே குயவன்குடி பகுதியில் வந்த போது எதிரே மதுரையில் இருந்து ராமேசுவரம் நோக்கி வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் சென்ற வேனும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் சித்தி விநாயகத்தின் குழந்தைகள் சாய்ராம் (வயது 4), திருமுருகன் (3) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் கிடைத்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ராஜேந்திரன் (60), அவருடைய மனைவி அம்பிகா(56) ஆகியோர் இறந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த சித்திவிநாயகம், ராகசுதா, சாதனா, இந்திரா, சுரேஷ், ரம்யா ஆகியோர் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல வேனில் வந்த நேபாளத்தை சேர்ந்த 21 பேர் படுகாயங்களுடன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 27 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இந்த விபத்து குறித்து கேணிக்கரை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.