பா.ஜனதாவின் 4 ஆண்டு ஆட்சியில் மராட்டியம் 20 வருடங்கள் பின்தங்கி விட்டது : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு


பா.ஜனதாவின் 4 ஆண்டு ஆட்சியில் மராட்டியம் 20 வருடங்கள் பின்தங்கி விட்டது : எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 31 Oct 2018 5:48 AM IST (Updated: 31 Oct 2018 5:48 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவின் 4 ஆண்டு ஆட்சியில் மராட்டியம் 20 வருடங்கள் பின்தங்கிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

மும்பை,

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இந்தநிலையில் பா.ஜனதா அரசின் 4 ஆண்டு ஆட்சி குறித்து எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்டவை கருத்து வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ரத்னாகர் மகாஜன் கூறியதாவது:-

மராட்டியத்தில் உள்ள பா.ஜனதா தலைவர்களில், தேவேந்திர பட்னாவிசின் அரசியல் செல்வாக்கு உயர்ந்துள்ளது உண்மைதான்.

ஆனால் அவரின் அரசியல் செல்வாக்கு மராட்டிய மக்களுக்கு எந்த வகையிலும் ஆதாயமாக அமையாது. 2014-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் வாக்குறுதிகள் கூட இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

சுங்கச்சாவடியற்ற மராட்டியம், தங்கர் சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு என அவர் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளும் வெறும் தேர்தல் வெற்றிக்காக மட்டுமே தெரிவிக்கப்பட்டது. பா.ஜனதாவின் 4 ஆண்டு ஆட்சியில் மராட்டியம் 20 வருடங்கள் பின்தங்கி விட்டது. மராட்டியத்தில் 16 ஆயிரம் கிராமங்கள் ஜல்யுக்த் சிவார் நீர்சேமிப்பு திட்டத்தால் வறட்சி அற்ற நிலையை அடைந்திருப்பதாக கூறுகிறார். எங்கு இருக்கிறது அந்த கிராமங்கள்? அந்த கிராமங்களின் பெயர்கள் அரசு இணையதளத்தில் பதிவிடப்படவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக், “பா.ஜனதா அரசு தனது அரசியல் லாபத்திற்காக சமூக அமைதியை சீர்கெடுத்து வருகிறது.அனைத்து தரப்பினரும் பா.ஜனதா அரசு மீது அதிருப்தியில் உள்ளனர்” என்றார்.

இதேபோல் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் பா.ஜனதா அரசின் 4 ஆண்டு ஆட்சியை கடுமையாக சாடியுள்ளனர்.

Next Story