திருக்கோவிலூர் அருகே: தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருக்கோவிலூர் அருகே தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளை யடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே கோமலூர் கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 55). தொழிலாளி. இவருடைய மனைவி மகாலட்சுமி (50). இவர் சென்னையில் தங்கி வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் குப்புசாமி தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் வசித்து வரும் மனைவியை பார்ப்பதற்காக சென்று விட்டார்.
இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் இது பற்றி குப்புசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நேற்று குப்புசாமி, மகாலட்சுமி ஆகிய 2 பேரும் வீட்டுக்கு வந்து பார்த்தனர். அப்போது அவர்கள் பீரோவில் வைத்திருந்த 8½ பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் 3 கிலோ வெள்ளிப்பொருட்களை காணவில்லை.
குப்புசாமி வீட்டில் இல்லாததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டு கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, நகை, பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2½ லட்சம் ஆகும். இது பற்றி குப்புசாமி திருக்கோவிலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருக்கோவிலூர் அருகே பொன்னியந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுப்பிரமணி(49), பெரியசாமி (60), செங்கான் (45). இவர்கள் 3 பேரும் பெங்களூருவில் தங்கி கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். இதனால் இவர்களின் 3 வீடுகளும் கடந்த சில மாதங்களாக பூட்டியே கிடந்தது.
சம்பவத்தன்று இவர்கள் 3 பேரின் வீடுகளும் திறந்து கிடந்தது. இதை அறிந்த அக்கம், பக்கத்தினர் அவர்கள் ஊரில் இருந்து வந்து விட்டதாக நினைத்து, அவர்களின் வீடுகளுக்கு சென்றனர். அப்போது அவர்கள் வீடுகளின் கதவுகள் உடைக்கப்பட்டு கிடந்தது.
இது பற்றி அவர்கள் அந்த 3 பேரிடமும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் பெங்களூருவில் இருந்து புறப்பட்டு திருக்கோவிலூர் வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கிடையே தகவல் அறிந்ததும் திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாபு, ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இருப்பினும் வீட்டின் உரிமையாளர்கள் வந்த பிறகே நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதா? என்று தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர். இது தவிர பொன்னியந்தல் கிராமத்தை சேர்ந்த முனுசாமி என்பவரது வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இது பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story