கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு


கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரிப்பு
x
தினத்தந்தி 1 Nov 2018 4:15 AM IST (Updated: 1 Nov 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

கோடியக்கரை சரணாலயத்திற்கு வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்துள்ளது.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. ஆர்டிக் பிரதேசங்களில் நிலவும் கடும் குளிரை போக்கவும், உணவுக்காகவும் அங்குள்ள பறவைகள் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரையில் ‘பறவைகளின் நுழைவுவாயில்’ என்று அழைக்கப்படும் கோடியக்கரைக்கு வந்து செல்வது வழக்கம்.

சைபீரியா, ஈரான், ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து பூநாரை, கொசுஉள்ளான், கூழைக்கிடா, கரண்டி மூக்குநாரை, சிவப்புகால் உள்ளான், ஆஸ்திரேலியாவில் இருந்து வரித்தலை வாத்து, பர்மாவில் இருந்து சிறவி வகைகள், இலங்கையில் இருந்து கடல்காகம், இமாச்சலப்பிரதேசத்தில் இருந்து உள்ளான் வகை பறவைகள் மற்றும் உள்நாடுகளில் இருந்து செங்கால் நாரை என பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் ஆண்டுதோறும் இங்கு வந்து செல்வது வழக்கம்.

அதேபோல இந்த ஆண்டு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தற்போது சைபீரியாவில் இருந்து பூநாரை உள்ளான், கரண்டிமூக்கு நாரை, சிறவிகள், இலங்கை பர்மாவில் இருந்து கூழைக்கிடா, செங்கால் நாரை, கடல் காகம் மற்றும் உள்ளூர் பறவைகளான கொக்கு, மடையன், சாம்பல்நாரை, பவளக்கால் உள்ளான் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து கோடியக்கரைக்கு பறவைகளின் வருகை அதிகரித்து உள்ளது.

இந்த பறவைகள் கோடியக்கரை நெடுந்தீவு, சிறுதலைகாடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 6 மணி வரையிலும் இரை தேடிச்செல்வதை பார்க்கலாம்.

இதுகுறித்து வனச்சரகர் கிருஷ்ணமூர்த்திகூறியதாவது:-

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு தற்போது வெளிநாட்டு பறவைகளின் வருகை அதிகரித்து உள்ளது. பறவைகளை பார்ப்பதற்கான வழிகாட்டி, தங்கும் அறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு உள்ளன. கடந்த ஆண்டு பறவைகள் மற்றும் வனவிலங்கு சரணாலயத்தை 30,805 சுற்றுலா பயணிகள் கண்டு களித்துள்ளனர். ஆதலால் இந்த ஆண்டு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை மீன்பிடி சீசன் காலமாகும். அதேபோல பறவைகளும் இந்த காலத்தில் தான் கோடியக்கரையில் முகாமிடுகின்றன. இவ்வாறு பறவைகள் வருவது மீன்பிடி தொழிலுக்கு உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதாவது கடல் காகம் கடற்கரை பகுதியில் அதிகம் காணப்பட்டால் மட்லி, மத்தி மீன்கள் அதிக அளவில் கிடைக்கும் எனவும், நாரை பறவைகள் அதிகமாக வந்தால் இறால் அதிகமாக கிடைக்கும் என்றும் மீனவர்கள் தெரிந்து வைத்துக்கொண்டு அதற்கேற்ப அதிக அளவில் மீன்களை பிடித்து வருகின்றனர். பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த சரணாலயத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் கோடியக்கரையில் இருந்து பழம்தின்னி வவ்வால்கள், தினமும் இலங்கை அனுராதாபுரம் காட்டுப்பகுதிக்கு சென்று பழங்களை தின்று வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story