கீழடி அகழாய்வு முடிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்; மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து


கீழடி அகழாய்வு முடிவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்; மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
x
தினத்தந்தி 31 Oct 2018 11:11 PM GMT (Updated: 31 Oct 2018 11:11 PM GMT)

கீழடி அகழாய்வு முடிவுகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மதுரை,

மதுரை ஐகோர்ட்டில், மதுரை மீனாட்சிநகரை சேர்ந்த பிரபாகர் பாண்டியன் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர், மதுரையை அடுத்த கீழடி பகுதியில் அகழாய்வில் ஈடுபட்டனர். இதில் அங்கு பழங்கால நகரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தகட்ட அகழாய்வுக்கு தயாராகி வந்த நேரத்தில், அமர்நாத்ராமகிருஷ்ணனை அசாம் மாநில தொல்லியல் துறைக்கு இடமாற்றம் செய்து கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது. அடுத்த கட்ட ஆய்வில் தற்போது வேறொரு அதிகாரி ஈடுபட்டுள்ளார். முதல் 2 கட்ட ஆய்வு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்து வருகிறார்.

இதற்கிடையே ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயார் செய்யக்கூடாது என்றும், அந்த அறிக்கையை பெங்களூரு தொல்லியல் துறை சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர்தான் தயார் செய்ய வேண்டும் என்றும் கடந்த 3–ந்தேதி மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டு உள்ளது. அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது. எனவே தமிழ் கலாசாரத்தின் பழமையை மறைக்கும் நோக்கத்தில் சில அதிகாரிகளின் துணையுடன் மத்திய அரசு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்க பெங்களூரு தொல்லியல் துறை சூப்பிரண்டுவை நியமித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன்தான் தயார் செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுக்களை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கீழடியின் முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை அமர்நாத்ராமகிருஷ்ணன் தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் அந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தொல்லியல் துறையின் தென் மண்டல இயக்குனர் நம்பிராஜன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

கீழடி அகழாய்வில் ஈடுபட்டிருந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அரசு இடமாறுதல் விதிப்படி, அசாம் மாநிலம் கவுகாத்திக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதில் எந்த விதிமீறலும் இல்லை. தொல்லியல் துறைக்கு அரசியல் நோக்கமோ, மதம் சார்ந்த கொள்கை, கோட்பாடோ கிடையாது. அகழாய்வுப்பணிகள் கடந்த 2014 முதல் 2017–ம் ஆண்டு வரை 3 கட்டங்களாக நடந்தது. 4–வது கட்ட அகழாய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட அலுவலரும் தொல்லியல் ஆராய்ச்சி வல்லுனர். எனவே, அமர்நாத்துக்கு இணையாக அவரும் திறம்பட அகழ்வாய்வு பணிகளை எவ்வித பேதமும் இல்லாமல் மேற்கொள்வார். அத்துடன், அவர் ஏற்கனவே அமர்நாத் மூலம் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணிகள் குறித்த அறிக்கையை ஆவணப்படுத்தும் பணியை மட்டுமே மேற்கொண்டு வருகிறார். அமர்நாத் மேற்கொண்ட அகழாய்வு பணிகள் குறித்த தொழில்நுட்ப அறிக்கைகளை அசாமில் இருந்தவாறு, குறிப்பிட்ட காலத்துக்குள் அவர் தயாரித்து அனுப்புவார். இந்த ஆய்வு குறித்த இறுதி அறிக்கையையும் ஐகோர்ட்டு உத்தரவுப்படி, அவரே தயாரித்து அனுப்புவார்.

வைகை ஆற்றங்கரை பகுதியில் தொல்லியல் சின்னங்கள் குறித்த மனுதாரரின் தகவல்கள் உண்மைதான். ஆனால், எங்களுக்கு கீழடியில் மட்டுமே அகழாய்வு செய்ய அரசு அனுமதி கிடைத்துள்ளது. கீழடியில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தின் முதல் நகர்ப்புற நாகரிகம் என்பதற்கான உறுதியான முழுமையான சான்றுகள் இன்னும் கிடைக்கவில்லை. அகழாய்வில் கிடைத்த அனைத்து பொருட்களையும் வெளிநாட்டு ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் கார்பன் சோதனை செய்வது இயலாத காரியமாகும். ஏற்கனவே, கிடைத்த தொல்பொருட்களை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி பாதுகாத்து வருகிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–

கீழடியில் நடத்தப்பட்ட முதல் 2 கட்ட அகழாய்வு அறிக்கையை அமர்நாத்ராமகிருஷ்ணன் தயாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர் ஆய்வு அறிக்கை தயாரிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால பொருட்களை கார்பன்டேட்டிங் சோதனைக்கு உட்படுத்தியபோது அவை 2,218 ஆண்டுகளுக்கு முந்தையவை என்பது தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஆய்வு முடிவு இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இந்த வழக்கை இத்துடன் முடிக்க நாங்கள் விரும்பவில்லை. கீழடி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து அடுத்த விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்.

கார்பன்டேட்டிங் சோதனை முடிவை தமிழக அரசுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசு அந்த சோதனை அறிக்கை அடிப்படையில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வில் கிடைக்கும் தகவல்களுடன் ஒப்பிட்டு ஒருங்கிணைந்த அறிக்கை ஒன்றை கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story