‘சர்கார்’ பட டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பதை தடுக்க கோரி வழக்கு; மதுரை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
‘சர்கார்‘ பட டிக்கெட்டுக்கு ரூ.1,000 வரை வசூலிப்பதாகவும், எனவே கூடுதல் தொகை வசூலிப்பதை தடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
மதுரை,
மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த மகேந்திரபாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–
வருகிற 6–ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகின்றன. குறிப்பாக நடிகர் விஜய் நடித்த ‘சர்கார்‘ படமும் வெளியாகிறது. இந்த படம் மதுரையில் 5–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளது.
தற்போது இந்த படத்தின் டிக்கெட்டுகளுக்கான ஆன்லைனில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் ஒரு டிக்கெட்டின் விலை ரூ.500 முதல் ரூ.1,000 வரை வசூலிக்கப்படுகிறது. இது சினிமா கட்டண வரைமுறை தொடர்பாக உள்துறை வெளியிட்டுள்ள அரசாணைக்கு எதிரானது.
சர்கார் படத்தின் டிக்கெட்டுகள் மதுரையில் உள்ள தனியார் அமைப்புகளின் மூலம் 1,000–ம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. எனவே அரசாணைப்படி டிக்கெட் கட்டணம் பெற வேண்டும் என்றும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதிகள் ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், “தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு உரிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது“ என்று தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த வழக்கு இன்று (வியாழக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது.