கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ.1½ லட்சம் சிக்கியது
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.1½ லட்சம் சிக்கியது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரூ.1½ லட்சம் சிக்கியது.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைகோவில்பட்டி–கடலையூர் ரோட்டில் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு வட்டார போக்குவரத்து அலுவலராக (பொறுப்பு) சந்திரசேகர் உள்ளார். இவர் விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவராகவும் உள்ளார்.
நேற்று காலையில் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்நாத் மற்றும் ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் இருந்தனர். வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) சந்திரசேகர் பணியில் இல்லை.
காலை 11 மணி அளவில் தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஹெக்டர் தர்மராஜ் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அண்ணாமலை, ராஜா உள்ளிட்ட 8 பேர் கொண்ட குழுவினர், கோவில்பட்டி வட்டார போக்குவரத்துக்கு அலுவலகத்துக்கு வந்தனர்.
ரூ.1½ லட்சம் சிக்கியதுவட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு, அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் பயிற்சி மைய உரிமையாளர்கள், இடைத்தரகர்கள் உள்ளிட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் இருந்த ரூ.1 லட்சத்து 54 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த பணத்தை எதற்காக கொண்டு வந்தனர்? என்பது குறித்து போலீசார் விசாரித்தனர். மேலும் வட்டார போக்குவரத்து அலுவலக ஊழியர்கள் மற்றும் வாகன ஓட்டுனர் பயிற்சி மைய உரிமையாளர்கள், இடைத்தரகர்களின் வாகனங்களையும் போலீசார் திறந்து பார்த்து ஆய்வு செய்தனர். அந்த வாகனங்களில் இருந்த ஆவணங்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஒவ்வொரு ஊழியர்களிடமும் தனித்தனியாகவும் போலீசார் விசாரணை நடத்தினர்.
இரவிலும் நீடித்ததுமதியம் அனைவருக்கும் ஓட்டலில் இருந்து உணவு வரவழைத்து போலீசார் வழங்கினர். இரவிலும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை நீடித்தது. இதனால் கோவில்பட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று எந்த பணிகளும் நடைபெறவில்லை.
வாகனத்தை பதிவு செய்தல், வாகன ஓட்டுனர் உரிமம் பெறுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.