வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் 19 வருடத்திற்கு பின்பு கைது


வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்தவர் 19 வருடத்திற்கு பின்பு கைது
x
தினத்தந்தி 3 Nov 2018 3:15 AM IST (Updated: 3 Nov 2018 1:24 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டு வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்து தலைமறைவானவரை, 19 வருடத்திற்கு பின்பு போலீசார் கைது செய்தனர்.

சிவகங்கை, 

தஞ்சாவூர் மாவட்டம், கருத்தட்டான்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து. இவர் கடந்த 1998-ம் வருடம் காரைக்குடி அருகே உள்ள வேப்பங்குடியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்தார். அப்போது நாடிமுத்து மற்றும் அவரது சகோதரர் முத்துக்குமார் ஆகிய இருவரும் சேர்ந்து வேப்பங்குடி கிராமத்தை சேர்ந்த சாகுல் ஹமீது உள்பட 8 பேரிடம், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் பணத்தை பெற்றுக் கொண்டனராம்.

பின்னர் வெளிநாட்டு வேலை வாங்கித்தராமலும், பணத்தை திருப்பி கொடுக்காமலும் இருந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை கேட்ட போதும், தகுந்த பதில் கூறாததால், வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கூறப்பட்டது. அதன் பேரில், கடந்த 1999-ம் வருடம் நாடிமுத்து மற்றும் அவரது சகோதரர் முத்துக்குமார் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் நாடிமுத்து கைது செய்யப்பட்டார். முத்துக்குமார் தலைமறைவாகி விட்டதால் காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் 19 வருடத்திற்கு பின்பு சென்னையில் தலைமறைவாக இருந்த முத்துக்குமாரை கைது செய்தனர்.

Next Story