சத்தியமங்கலம் அருகே: குடிசை வீடு தீப்பிடித்தது; பொருட்கள் எரிந்து நாசம் - 5 பேர் உயிர் தப்பினர்


சத்தியமங்கலம் அருகே: குடிசை வீடு தீப்பிடித்தது; பொருட்கள் எரிந்து நாசம் - 5 பேர் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 3 Nov 2018 3:30 AM IST (Updated: 3 Nov 2018 3:20 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் அருகே குடிசை வீடு தீப்பிடித்ததில் பொருட்கள் எரிந்து நாசம் ஆனது. இந்த தீ விபத்தில் 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் அருகே உள்ள கெஞ்சனூர் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன் (வயது 58). விவசாயி. இவருடைய மனைவி சரோஜினி (57). இவர்களுடைய மகன் விஜயகுமார் (32). இவருடைய மனைவி சவுந்தர்யா (25). இவர்களுடைய மகன் பிரதீஷ் (2). மாரப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அந்தப்பகுதியில் தோட்டத்தில் குடிசை வீடு அமைத்து வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் திடீரென குடிசை வீட்டின் ஒரு பகுதியில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் மளமளவென பரவிய தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.

இதன் காரணமாக வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 5 பேரும் திடுக்கிட்டு எழுந்தனர். கண்விழித்து பார்த்தபோது குடிசை தீப்பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டில் இருந்து வெளியேறி உயிர் தப்பினார்கள். இதைத்தொடர்ந்து மாரப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை பார்த்த அக்கம்பக்கத்தினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. ஆனால் குடிசை வீடு எரிந்ததோடு, வீட்டில் இருந்த டி.வி., மின்விசிறி உள்பட அனைத்து பொருட்களும் எரிந்து நாசம் ஆனது.

தன்னுடைய குடிசை வீட்டில் மர்மநபர்கள் தீ வைத்துவிட்டதாக சத்தியமங்கலம் போலீசில் மாரப்பன் நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இகுறித்து தகவல் அறிந்ததும் பவானிசாகர் எஸ்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. அந்த குடிசை வீட்டுக்கு சென்று பார்வையிட்டு, மாரப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் எம்.எல்.ஏ., ‘உரிய இழப்பீடு வாங்கித்தர நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார்.

Next Story