நீர்நிலைகளில் உடைப்பை அடைக்க 1 லட்சத்து 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் கலெக்டர் தகவல்


நீர்நிலைகளில் உடைப்பை அடைக்க 1 லட்சத்து 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 4 Nov 2018 4:30 AM IST (Updated: 4 Nov 2018 12:50 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் நீர்நிலைகளில் உடைப்பை அடைக்க 1 லட்சத்து 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன என கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.

நாகப்பட்டினம்,

நாகை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நடைபெற்று வரும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாகை மாவட்டத்தில் பருவமழை காலங்களில் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது அவர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தரவும், மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் ஆகியவற்றில் பொதுமக்களை தங்க வைக்கும் வகையில் தயார் நிலையில் உள்ளது. பருவமழை காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சல் உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 33 மருத்துவ முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 14 நடமாடும் மருத்துவக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. கால்நடைகளுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உடனுக்குடன் தகவல் தெரிவிக்க 28 கால்நடை மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நாகை மாவட்ட நிர்வாகம் சார்பில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் வகையில் 5 நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் போலீஸ்துறையின் மூலம் 8 குழுக்களும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலம் 9 குழுக்களும் இந்த பணியில் ஈடுபட உள்ளனர். அவசர நடவடிக்கை மற்றும் மீட்பு பணிக்காக 88 பொக்லின் எந்திரங்கள், 54 படகுகள் தயார் நிலையில் உள்ளன. நீரில் மூழ்குபவர்களை காப்பாற்ற 103 நீச்சல் வீரர்கள் உள்ளனர். நீர்நிலைகளில் உடைப்பை அடைக்க 1 லட்சத்து 20 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தால் 6 ஆயிரம் மின்கம்பங்களும், 12 மின்மாற்றிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சண்முகசுந்தரம், நாகை நகராட்சி ஆணையர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், போக்குவரத்துக்கழக நாகை பணிமனை மேலாளர் செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் இருந்தனர். 

Next Story