கரூரில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு


கரூரில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 3 Nov 2018 10:15 PM GMT (Updated: 3 Nov 2018 8:44 PM GMT)

கரூரில் 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் வடக்கு காந்தி கிராமத்தை சேர்ந்தவர் வித்யாசாகர்(வயது 25). இவர் வையாபுரி நகர் கோவை ரோடு பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் கடையை திறக்க வந்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது ஜவுளி துணிகள் அனைத்தும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் கல்லா பெட்டியை பார்த்தபோது, அதில் இருந்த ரூ.2,000 திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதேபோல் அந்த பகுதியில் உள்ள வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் மற்றொரு கடையிலும் ரூ.8,000 திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து கரூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த 2 கடைகளையும் பார்வையிட்டு தீவிரமாக விசாரித்தனர்.

வலைவீச்சு

மேலும் துணிக்கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை பார்வையிட்டபோது மர்மநபர் ஒருவர் டார்ச்லைட் அடித்து கொண்டு கடைக்குள் நுழைந்து பணம் திருடுவது தெளிவாக பதிவாகியிருந்தது. அதனை வைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட அந்த நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தீபாவளி பண்டிகை வியாபாரம் கோவை ரோடு பகுதியில் மும்முரமாக நடந்து வரும் வேளையில் துணிக்கடை உள்பட 2 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story