டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.2½ லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை


டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.2½ லட்சம் கொள்ளை மர்ம நபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 3 Nov 2018 10:15 PM GMT (Updated: 3 Nov 2018 9:29 PM GMT)

சுசீந்திரம் போலீஸ் நிலையம் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரை தாக்கி ரூ.2½ லட்சம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலகிருஷ்ணன்புதூர்,

குமரி மாவட்டம் சுசீந்திரம் அக்கரையில் போலீஸ் நிலையம் அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையின் மேற்பார்வையாளராக புதுகிராமத்தை சேர்ந்த முருகன் (வயது49) என்பவரும், விற்பனையாளர்களாக வின்சென்ட், ரொனால்டு ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் தினமும் விற்பனையாகும் பணத்தை சரி பார்த்து மறுநாள் வங்கியில் போடுவதற்காக வீட்டுக்கு எடுத்து செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு விற்பனை முடிந்த பின்பு கடையை பூட்டிவிட்டு உள்ளே அமர்ந்து விற்பனை பணம், மற்றும் இருப்புகளை சரி பார்த்தனர். பின்னர், மேற்பார்வையாளர் முருகன், ரூ.2 லட்சத்து 49 ஆயிரத்து 30-ஐ ஒரு பையில் வைத்துக்கொண்டு தனது மோட்டார் சைக்கிள் அருகில் சென்றார். விற்பனையாளர்கள் இருவரும் கடை ஷட்டரை பூட்டிக் கொண்டிருந்தனர். அப்போது, கடையின் அருகே மூடிகிடந்த பாரில் இருந்து சத்தம் கேட்டது.

உடனே, முருகன் பாருக்குள் சென்று பார்த்தார். அப்போது, அங்கு அரிவாள், கம்பு போன்ற பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் மறைந்து இருந்தனர். அவர்கள் முருகனை சரமாரியாக தாக்கினர். இதற்கிடையே சத்தம் கேட்டு விற்பனையாளர்கள் இருவரும் அங்கு ஓடி சென்றனர். அப்போது மர்ம நபர்கள் அரிவாளை காட்டி அவர்களை விரட்டினர். விற்பனையாளர்கள் பயந்து ஓடினர். அப்போது மர்ம நபர்கள் முருகனிடம் பணம் இருந்த பையை பறித்துவிட்டு ஓடிவிட்டனர்.

இதுகுறித்து முருகன் சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

கொள்ளையர்கள் தப்பி சென்றபோது, கடையின் பின்பகுதியில் உள்ள வயல்வெளி வழியாக ஓடினர். வயல்வெளியின் மறுபக்கம் நான்குவழி சாலை செல்கிறது. எனவே, அவர்கள் அங்கிருந்து வாகனங்களில் தப்பி சென்றிருக்கலாம் எனத்தெரிகிறது. மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். போலீஸ் நிலையம் அருகே டாஸ் மாக் மேற்பார்வையாளரை தாக்கி துணிகர கொள்ளை நடந்திருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story