மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை: மரங்கள் விழுந்ததால் கொடைக்கானலில் மின்சாரம் துண்டிப்பு


மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை: மரங்கள் விழுந்ததால் கொடைக்கானலில் மின்சாரம் துண்டிப்பு
x
தினத்தந்தி 3 Nov 2018 11:15 PM GMT (Updated: 3 Nov 2018 10:38 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் நேற்று பரவலாக சாரல் மழை பெய்தது. மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் கொடைக்கானலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் நேற்று அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதையடுத்து, மாலை வரை விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது.

இதனால், பொதுமக்கள் குடைகளை பிடித்தபடியே வெளியே சென்றனர். இதேபோல், சிறுநாயக்கன்பட்டி, அணைப்பட்டியிலும் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. கொடைக்கானலில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. கனமழை எதிரொலியாக கொடைக்கானலில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. கொடைக் கானல் வெள்ளிநீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

இதற்கிடையே, கொடைக்கானல் கோகினூர் மாளிகை அருகே நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தன. உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நகர் முழுவதும் இருளில் மூழ்கியது. பின்னர், காலை 6.30 மணியளவில் ஊழியர்கள் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தினர்.

இதையடுத்து, கொடைக் கானலுக்கு மின்வினியோகம் செய்யப்பட்டது. இதேபோன்று, கொடைரோடு, நிலக்கோட்டை, சாணார்பட்டி, வேடசந்தூர், பழனி உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்தது.

திண்டுக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக கொடைக்கானலில் 15 மி.மீ., பழனியில் 2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

Next Story