வடமதுரையில் பரபரப்பு: கூட்டுறவு கடன் சங்கத்தை பூட்ட மறந்த ஊழியர்கள் - விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்


வடமதுரையில் பரபரப்பு: கூட்டுறவு கடன் சங்கத்தை பூட்ட மறந்த ஊழியர்கள் - விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்
x
தினத்தந்தி 5 Nov 2018 3:30 AM IST (Updated: 4 Nov 2018 10:54 PM IST)
t-max-icont-min-icon

வடமதுரையில் கூட்டுறவு கடன் சங்கத்தை பூட்டுவதற்கு மறந்து ஊழியர்கள் சென்றுவிட்டனர். விடிய, விடிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை தப்பியது.

வடமதுரை,

வடமதுரை ரெயில்நிலைய சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் மாலை ஊழியர்கள் கடன் சங்கத்தின் கதவை பூட்டாமல் மறந்து சென்று விட்டனர். அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள், சங்கத்தில் தணிக்கை நடைபெறுவதால் பூட்டப்படாமல் உள்ளதாக கருதினர்.

ஆனால் நள்ளிரவு வரை கூட்டுறவு கடன் சங்கத்தின் கதவு திறந்தே கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள், வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தபோது கதவு பூட்டப்படாமல் இருந்தது.

இதையடுத்து கூட்டுறவு கடன் சங்க ஊழியர்களை போலீசார் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் விடிய, விடிய போலீசார் கூட்டுறவு கடன் சங்கத்தின் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பின்னர் காலையில் கூட்டுறவு கடன் சங்க ஊழியர் ஒருவரின் வீட்டு முகவரியை அறிந்து, அவரை நேரடியாக அழைத்து வந்து கடன் சங்கத்தை பூட்ட செய்தனர். கடன் சங்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும், பணமும் இருந்ததாக கூறப்படுகிறது. கூட்டுறவு கடன் சங்கத்தின் பூட்டு திறந்திருந்ததை பொதுமக்கள் கவனித்ததால் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகை, பணம் தப்பியது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story