விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவோம் கலெக்டர்கள் வேண்டுகோள்


விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவோம் கலெக்டர்கள் வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Nov 2018 10:45 PM GMT (Updated: 4 Nov 2018 8:17 PM GMT)

விபத்தில்லா தீபாவளியை கொண்டாடுவோம் என்று அரியலூர், பெரம்பலூர் கலெக்டர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெரம்பலூர்,

தீமையினை நன்மை வென்றதை நினைவுபடுத்தும் விதமாகவும், நமது கலாசாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும், இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும், தீபாவளிக்கு முன்பு 7 நாட்களும் தீபாவளிக்கு பின்பு 7 நாட்களும் என மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும்.

மேலும் மாசில்லா சுற்றுச் சூழலை பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும், பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவதற்கு பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

மேலும் அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். மக்கள் அனைவரும் விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவோம்.

இவ்வாறு அதில் அவர்கள் கூறியுள்ளனர். 

Next Story