ஆஸ்பத்திரி, வழிபாட்டுத்தலம் அருகில் பட்டாசு வெடிக்க தடை: மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு


ஆஸ்பத்திரி, வழிபாட்டுத்தலம் அருகில் பட்டாசு வெடிக்க தடை: மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Nov 2018 3:45 AM IST (Updated: 5 Nov 2018 2:04 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத்தலங்கள் அருகில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என்று மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

சிவகங்கை,


சிவகங்கை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அலுவலர் ராஜேந்திரபாபு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் 2 மணி நேரம் மட்டுமே நிர்ணயம் செய்தது. மேலும் அந்த 2 மணி நேரத்தை தமிழ்நாடு அரசே தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும், இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்கியது.

எனவே பொதுமக்கள் இந்த நேரத்தில் பட்டாசுகளை வெடிக்கலாம். அத்துடன் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை தான் வெடிக்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்தந்தப் பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்.

அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசைப் பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story