தமிழக-கேரள எல்லையில் வணிகவரி சோதனை சாவடி இல்லாததால் ஏலக்காய் கடத்தல் அதிகரிப்பு


தமிழக-கேரள எல்லையில் வணிகவரி சோதனை சாவடி இல்லாததால் ஏலக்காய் கடத்தல் அதிகரிப்பு
x
தினத்தந்தி 5 Nov 2018 5:00 AM IST (Updated: 5 Nov 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் வணிகவரி சோதனை சாவடி இல்லாததால் ஏலக்காய் கடத்தல் அதிகரித்து உள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

கம்பம்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பீர்மேடு, தேவிகுளம், உடும்பன்சோலை தாலுகாக்களில் பல லட்சம் ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு சாகுபடி செய்யப்படும் ஏலக்காய், கம்பம்மெட்டு அருகில் உள்ள புத்தடி ‘ஸ்பைசஸ் பார்க்கில்’ ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படும். வாரத்தில் 7 நாட்களும் இந்த ஏலம் நடைபெறும்.

இந்த ஏலத்தில், தமிழகத்தின் பலபகுதிகளில் இருந்து வியாபாரிகள் சென்று, ஏலக்காய் கொள்முதல் செய்வார்கள். ஏலக்காயை விவசாயிகள் தனியாக விற்பனை செய்ய முடியாது. அவ்வாறு விற்பனை செய்வதற்கு வரி செலுத்த வேண்டும். தனித்தனியாக வரி செலுத்த முடியாது என்பதால், மத்திய வர்த்தக அமைச்சகம் நறுமணபொருட்கள்(ஸ்பைசஸ்) வாரியத்தின் மூலம் இந்த ஏல மையத்தை அமைத்துள்ளது.

இந்த மையத்தில் வியாபாரிகள் கொள்முதல் செய்தபின், அவர்கள் கொள்முதல் செய்த அளவுக்கு ஏற்ப ஜி.எஸ்.டி வரி பிடித்தம் செய்யப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு ஏலமையத்தால் செலுத்தப்படும். முறைப்படி கொள்முதல் மற்றும் விற்பனைக்கு பில் வழங்கப்படும்.

ஜி.எஸ்.டி.அமலுக்கு வருவதற்கு முன்பு இடுக்கி மாவட்டத்தில் இருந்து கம்பம்மெட்டு மற்றும் போடி, குமுளி ரோடுகள் வழியாக ஏலக்காய் கடத்தப்படுவதை தடுக்க தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் வணிகவரி சோதனை சாவடி அமைக்கப்பட்டு அதன்மூலம் கண்காணிக்கப்பட்டு முறையான வரிகள் விதிக்கப்பட்டன. இந்தநிலையில் ஜி.எஸ்,டி. அமலுக்கு வந்த பிறகு கேரள, தமிழக-கேரள எல்லையில் செயல்பட்டு வந்த அனைத்து வணிகவரி சோதனை சாவடிகளும் மூடப்பட்டது.

இந்தநிலையில் உரிய வரி செலுத்தாமல் ஏய்ப்பு செய்து, தோட்டங்களில் இருந்து குமுளி, கம்பம்மெட்டு ரோடுகள் வழியாக நேரடியாக தமிழகத்திற்கு ஏலக்காய் அதிகளவில் கடத்தி கொண்டு வரப்படுகிறது. இதனால் ஜி.எஸ்.டி. வரி கட்டப்படாமல் மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. மேலும் தற்போது இரு மாநிலங்களிலும் வணிகவரித்துறை சோதனை சாவடிகள் மூடப்பட்டதால் கடத்தல்காரர்கள் லாரி, ஜீப் மற்றும் சொகுசு கார்களில் ஏலக்காய்களை கடத்தி சென்று வரி இல்லாமல் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக பல புரோக்கர்கள் செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே அவ்வப்போது எல்லைப்பகுதியில் தமிழக அரசு அதிகாரிகள் சோதனைகள் மேற்கொண்டு வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.




Next Story