சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கரூர் பஸ்- ரெயில் நிலையங்களில் குவிந்த மக்கள்


சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கரூர் பஸ்- ரெயில் நிலையங்களில் குவிந்த மக்கள்
x
தினத்தந்தி 5 Nov 2018 10:30 PM GMT (Updated: 5 Nov 2018 8:56 PM GMT)

சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக கரூர் பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

கரூர்,

கரூரில் டெக்ஸ்டைல் ஜவுளி, கொசுவலை, பஸ்பாடி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் வெளி மாவட்ட தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வருகின்றனர். அந்த தொழிலாளர்கள் உள்பட பொதுமக்கள் பலர் தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடும் வகையில் போக்குவரத்தினை மேற்கொள்வதற்காக கரூர் பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையத்திற்கு படையெடுத்தனர். இதனால் அங்கு வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்தது. கரூரில் இருந்து அரசு சார்பில் கோவை, திண்டுக்கல், திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தனர்.

ரெயில் நிலையத்திலும்...

இதேபோல் கரூர் ரெயில் நிலையம் வழியாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் ரெயில்களின் முன்பதிவில்லா பெட்டிகளில் மக்கள் நின்று கொண்டே செல்லும் அளவுக்கு கூட்டம் இருந்தது. இதனால் கரூர் பயணிகள், ரெயிலில் முண்டி அடித்து கொண்டு தான் உள்ளே சென்று பயணித்ததை பார்க்க முடிந்தது. ரெயிலில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு உள்ளிட்டவற்றை யாரேனும் எடுத்து செல்கின்றனரா? என்பது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் ஆய்வு செய்து, சில நபர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் திருட்டு, நகை பறிப்பு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் ரெயில் நிலைய நடைமேடையில் ரெயில்வே போலீசார் ரோந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Next Story