புதிய பஸ்நிலையம் அருகே இரவில் பயங்கரம்: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து


புதிய பஸ்நிலையம் அருகே இரவில் பயங்கரம்: பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து
x
தினத்தந்தி 8 Nov 2018 4:50 AM IST (Updated: 8 Nov 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

புதுவை புதிய பஸ்நிலையம் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

புதுச்சேரி,

புதுச்சேரி நகர பகுதியில் பஸ்நிலையத்திற்கு பின்புறம் உள்ள மங்கலட்சுமி நகரில் உள்ள ஒரு கடையில் நேற்று இரவு 11 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது. இதில் அந்த கடையில் உள்ள பொருட்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மேலும் மளமளவென அருகில் உள்ள கடைகள் மற்றும் பிளாஸ்டிக் குடோனுக்கு பரவியது.

இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே புதுச்சேரி தீயணைப்பு நிலைய அதிகாரி மனோகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 வண்டிகளில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீச்சியடித்து தீயை அணைத்தனர். ஆனால் தீ கட்டுக்குள் அடங்காமல் மேலும் கொளுந்து விட்டு எரியத்தொடங்கியது.

இதனை தொடர்ந்து கோரிமேடு, வில்லியனூர், சேதராப்பட்டு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தலா ஒரு வண்டியில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனால் நேற்று நள்ளிரவு வரை தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

மேலும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் விதமாக இந்த தீ விபத்தால் அந்த பகுதியில் மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இந்த பகுதியில் உள்ள மக்கள் கடும் அவதி அடைந்தனர்.

தொடர்ந்து தீ எரிந்து வருவதால் சேத மதிப்பு விவரங்கள் உடனடியாக தெரியவில்லை.

இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது பட்டாசுகள் வெடித்து சிதறியதில் தீ விபத்து ஏற்பட்டதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story