அரூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் பேத்தி கைது திடுக்கிடும் தகவல்கள்


அரூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் பேத்தி கைது திடுக்கிடும் தகவல்கள்
x
தினத்தந்தி 8 Nov 2018 10:15 PM GMT (Updated: 8 Nov 2018 9:34 PM GMT)

அரூர் அருகே மூதாட்டி கொலை வழக்கில் பேத்தியை போலீசார் கைது செய்தனர். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ளது சிட்லிங் என்ற மலைக்கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பபோயன். இவருடைய மனைவி லட்சுமி (வயது 75). கடந்த 3-ந்தேதி இரவு லட்சுமி வீட்டில் இருந்தபோது கொலை செய்யப்பட்டு உடல் சிட்லிங் ரோட்டில் வீசப்பட்டு இருந்தது. இந்த கொலையில் துப்புதுலக்க கோட்டப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர்.

கொலை தொடர்பாக வீட்டில் இருந்த லட்சுமியின் 17 வயது பேத்தி உள்பட பலரிடம் விசாரித்தனர். அப்போது லட்சுமியின் பேத்தி போலீசாரிடம், தனது பாட்டியை தலையில் சிலர் தாக்கி கொலை செய்து சிட்லிங் ரோட்டில் உடலை போட்டுவிட்டு சென்றதாக கூறினாராம். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது லட்சுமியை அவருடைய பேத்தியே கொலை செய்தது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

17 வயதான பேத்தி தனது உறவினரான ஒரு வாலிபரை காதலித்து வந்தார். இந்த காதலுக்கு லட்சுமி எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பேத்தி சம்பவத்தன்று இரவு லட்சுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது அவரது தலையில் கல்லால் தாக்கி கொன்ற பின்னர் உடலை சிட்லிங் ரோட்டில் போட்டுள்ளார். அதன்பிறகு லட்சுமியை சிலர் தாக்கி கொலை செய்து விட்டதாக நாடகம் ஆடியுள்ளார். போலீஸ் விசாரணையில் இந்த தகவல்கள் வெளியாகி உள்ளது. லட்சுமியை கொலை செய்து உடலை தூக்கிச்செல்ல பேத்திக்கு வேறு யாராவது உதவிக்கு வந்தார்களா? என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாட்டியை பேத்தியே கொலை செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story